Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஐஏஎஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசு உதவித்தொகை

ஆகஸ்டு 10, 2023 01:26

நாமக்கல்: தமிழகத்தில், நான் முதல்வன் போட்டித் தேர்வு பிரிவின் மூலம், ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசின் உதவித்தொகை வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா அறிவித்துள்ளார்.

இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வருகிற 2024ம் ஆண்டு மே 26 ஆம் தேதி மத்திய அரசின் அரசின் முதல் நிலை குடிமைப்பணி (யுபிஎஸ்சி) தேர்வில் பங்கேற்க உள்ள விண்ணப்பதாரர்களுக்கு, தமிழக அரசின் மூலம் வரும் செப்.10ம் தேதி, Naan Mudhalvan UPSC Prelims Scholarship Exam 2023 என்ற முன்னோடி மதிப்பீட்டுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் 1,000 மாணவர்களுக்கு, மாதம் ஒன்றுக்கு ரூ.7,500 உதவித் தொகையாக 10 மாதங்களுக்கு, குடிமைப் பணிகள் முதல்நிலைத் தேர்வில் (யுபிஎஸ்சி மெயின்ஸ்) தேர்ச்சி பெறுவதற்கு பயிற்சி எடுப்பதற்காக வழங்கப்படும்.

மேலும் தேர்வு செய்யப்படும் 1,000 விண்ணப்பதாரர்களில், முதல் முறை விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு 50 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கான குறைந்தபட்ச வயது 21 ஆகும். 1.8.2024 அன்று 22 வயதினை பூர்த்தி செய்யாமல் இருத்தல் வேண்டும்.

பிற விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்ச வயது 21 ஆகும். ஆதிதிராவிடர், பழங்குடியினர், ஆதிதிராவிடர் (அருந்ததியர்) ஆகியோர்களுக்கு அதிகபட்சம் 37 வயதிற்கு மிகாமலும், மாற்றுத்திறனாளி மாணவர்கள் 42 வயதிற்கு மிகாமலும், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் 35 வயதிற்கு மிகாமலும், பொது பிரிவினர் 32 வயதிற்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட ஓர் பல்கலைக்கழகத்தில் குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மதிப்பீட்டு போட்டித் தேர்வுக்கு பங்கேற்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் வருகிற 17ம் தேதிக்குள்,https://nmcep.tndge.org/apply_now என்ற வெப்சைட் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 90437 10214, 90437 10211 என்ற செல்போனில் தொடர்பு கொள்ளலாம்.

இதில் மத்திய, மாநில அரசுப் பணிகளில் பணிபுரியும் விண்ணப்பதாரர்கள் மதிப்பீட்டுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள். 26.05.2024 அன்று நடைபெற உள்ள மத்திய அரசின் குடிமைப்பணிகள் முதல்நிலைத் தேர்விற்கு விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு உதவித்தொகை பெற தகுதியில்லை.

மத்திய அரசின் குடிமைப்பணிகள், முதல்நிலைத் தேர்விற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் உதவித்தொகைக்கான தேர்வில் பங்கேற்று பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்