Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை நினைவு இல்லத்தில்  சிலை அமைப்பது குறித்து கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் ஆய்வு

ஆகஸ்டு 14, 2023 10:27

நாமக்கல்: நாமக்கல் நகராட்சி, இராமலிங்கம் நகரில் அமைந்துள்ள நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை நினைவு இல்லத்தில் நாமக்கல் கவிஞர் மார்பளவு சிலை அமைப்பது குறித்து ஆய்வு நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா,  தலைமையில், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் முன்னிலை வகித்தனர். நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும்,  மாநிலங்களவை உறுப்பினருமான  கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் கலந்து கொண்டு நாமக்கல் கவிஞர் மார்பளவு சிலை அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார். 

பின்னர்,  மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாமக்கல் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை நினைவு இல்லத்தில்  நாமக்கல் கவிஞர் மார்பளவு சிலை அமைக்க வேண்டுமென்ற பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றிடும் வகையில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் அன்னாரது மார்பளவு சிலை அமைக்க நிதி ஒப்பளிப்பு செய்து அரசாணை பிறப்பித்துள்ளார்.

நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் மகளிர் கலைக் கல்லூரி வளாகத்தில் அன்னாரது மார்பளவு சிலையை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன்பு திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றுகையில், நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை நினைவு இல்லத்தில் சிலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். அவரது சீரிய முயற்சியின் காரணமாக இன்றைய தினம் சிலை அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.  

தமிழ்நாடு முதலமைச்சருக்கு இந்த நேரத்தில் எங்களது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். இதற்கு உறுதுணையாக இருந்த  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்களுக்கும்,  செய்தித்துறை அமைச்சருக்கும், வனத்துறை அமைச்சருக்கும் நாமக்கல் மாவட்ட பொதுமக்களின் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏற்கனவே, நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை அவர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள கட்டடத்திற்கு நாமக்கல் கவிஞர் மாளிகை என டாக்டர் முத்தமிழறிஞர் கலைஞரால் பெயர் சூட்டப்பட்டது. அந்த வகையில் நாமக்கல் மாவட்டம், புதுசத்திரத்தில் சென்னை மாகணத்தின் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் ப.சுப்பராயன் அவர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் அரங்கம் அமைக்கும் பணிக்கு தமிழ்நாடு முதலமைச்சரால் அடிக்கல் நாட்டப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்படவுள்ளது.

இன்றையதினம் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை நினைவு இல்லத்தில் நாமக்கல் கவிஞர் மார்பளவு சிலை அமைக்க இடத்தினை தேர்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கப்படும் என நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் நாமக்கல் நகர் மன்றத்தலைவர் து.கலாநிதி, துணைத்தலைவர் செ.பூபதி, மாவட்ட நூலக அலுவலர் தேன்மொழி, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் பாலசுப்ரமணியம், உதவி பொறியாளர் சிவக்குமார், உள்ளாட்சி பிரதிநிதிகள், துறைச்சார்ந்த அலுவலர்கள் மற்றும் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்