Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா

ஆகஸ்டு 14, 2023 10:39

நாமக்கல்: நாமக்கல் நகராட்சி, நாமக்கல் (வடக்கு) அரசு மேல்நிலைப் பள்ளியில் மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த உறுப்பினர்களுக்கு கடனுதவியும், மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தலைமை தாங்கினார். நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் முன்னிலை வகித்தார்.

இதில் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் 115 மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 1,495 உறுப்பினர்களுக்கு ரூ.11.40 கோடி மதிப்பிலான கடனுதவியும், மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கல்வித்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கி பல்வேறு அரசு நலத்திட்டங்கள், குறிப்பாக பள்ளி கல்வித் துறையில் மாணவ, மாணவியர்கள் தொடர்ந்து கல்வி பயில ஊக்குவிக்கும் வகையில் புதிய புதிய திட்டங்கள், மாணவ மாணவியர்கள் அவர்கள் வசிக்கும் வீட்டுக்கு அருகிலேயே சென்று தன்னார்வலர்களின் பங்கேற்புடன் கற்றுக் கொடுக்கும் வாய்ப்பை வழங்க ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்து இல்லம் தேடிக் கல்வி திட்டம்,  மாணவ, மாணவியர்களின் அறிவுத்திறனை மேம்படுத்துவதற்கு ”எண்ணும் எழுத்தும் திட்டம்”, உயர்கல்வி பயிலுவதற்கு வழிகாட்டுதல்களை வழங்குவதற்காக ”நான் முதல்வன் திட்டம்”, ”கல்லூரி கனவு” என மாணாக்கர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

மேலும் பெண் கல்வியை ஊக்குவிக்கும் விதமாக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவியர்களுக்கு உயர்கல்வி பயில புதுமை பெண் திட்டம் மூலம் மாணவியர்களுக்கு மாதம் ரூ.1,000/- ,  மாணவ, மாணவியர்கள் இதுபோன்ற பல்வேறு திட்டங்களை நல்லமுறையில் பயன்படுத்தி, நன்றாக கல்வி பயின்று சமூகத்தில் நல்ல நிலையை அடைந்திட வேண்டும்.

நாமக்கல் மாவட்டத்தில் தற்போது வரை ஊரக பகுதிகளில் 8,506 குழுக்கள் மற்றும் நகர்ப்புர பகுதிகளில் 3,446 குழுக்களும் மொத்தமாக 11,952 மகளிர் சுய உதவிக்குழுக்கள் 1,31,472 உறுப்பினர்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. குழுக்களில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு உறுப்பினர் பயிற்சிகள், ஊக்குநர் மற்றும் பிரதிநிதி பயிற்சிகள் வழங்கி தர மதிப்பீடு செய்யப்பட்டு ஆதார நிதியாக (சுழல் நிதி) கிராம புறங்களில் ரூ.15,000/- நகர்ப்புற பகுதிகளை சேர்ந்த குழுக்களுக்கு, ரூ.10,000/- மானியமாக வழங்கப்படுகிறது. குழு துவங்கி ஆறு மாதங்கள் நிறைவு பெற்ற குழுக்களுக்கு அவர்களின் சேமிப்பு தொகைக்கு ஏற்ப வங்கி கடன் பெற்றுத் தரப்படுகிறது.

சிறப்பாக செயல்படும் சுய உதவிக்குழுக்கள் ரூ.10.00 இலட்சம் முதல் ரூ.15.00 இலட்சம் வரை வங்கி கடன் பெற்று குழு உறுப்பினர்கள் சுய தொழில் செய்து வருகின்றனர்.

 2022 - 2023 ஆம் ஆண்டில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்பாக ரூ.650.00 கோடி இலக்கீடு நிர்ணயிக்கப்பட்டதில் ரூ.658.62 கோடி கடன் இணைப்பு 10,751 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்டு இலக்கு எய்தப்பட்டுள்ளது.

2023 – 2024 ஆம் ஆண்டில் ரூ.668.00 கோடி இலக்கீடு நிர்ணயிக்கப்பட்டதில் தற்போது வரை ஊரகம் மற்றும் நகர்ப்புரத்தைச் சார்ந்த 4063 குழுக்களுக்கு ரூ.276.07 கோடி எய்தப்பட்டுள்ளது.

 கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு இன்றையதினம் ஊரக மற்றும் நகர்ப்புங்களில் உள்ள 115 மகளிர் சுய உதவிக் குழுக்களில் உள்ள 1,495 உறுப்பினர்களுக்கு ரூ.10.59 கோடி நேரடி வங்கி கடனாகவும், பெருங்கடனாக 2 ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிற்கு ரூ.80.00 இலட்சம் மொத்தமாக ரூ.11.40 கோடி கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

கடனுதவிகள் பெற்ற மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் சுயத் தொழில் தொடங்கி, தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டுமென கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்.பி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் நாமக்கல் நகர் மன்றத்தலைவர் து.கலாநிதி, துணைத்தலைவர் செ.பூபதி, நகர திமுக செயலாளர் ராணாஆனந்த்,  நகர்மன்ற உறுப்பினர்கள் சிவக்குமார், நந்தகுமார், முதன்மை கல்வி அலுவலர் ப.மகேஸ்வரி, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு மகளிர் திட்ட இயக்குநர் மா.பிரியா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முருகன், மாவட்ட கல்வி அலுவலர் ரவிச்சந்திரன், உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் தலைமையசிரியர், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்