Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாமகிரிப்பேட்டை அரசு பள்ளியில் புதிய பாடப்பிரிவுகள் தொடக்கம் ராஜேஸ்குமார் எம்.பி துவக்கி வைத்தார் 

ஆகஸ்டு 14, 2023 11:53

ராசிபுரம்: நாமகிரிப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இக்கல்வியாண்டு முதல் புதியதாக இரு கலைப்பாடப்பிரிவு தொடங்க அரசு அனுமதியளித்துள்ளது.

இதற்கான தொடக்க விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் பள்ளி தலைமையாசிரியர் எம்.செண்பகவள்ளி தலைமை வகித்தார். சேந்தமங்கள் சட்டப்பேரவைத்தொகுதி உறுப்பினர் கே.பொன்னுசாமி, முன்னாள் எம்எல்ஏ., கே.பி. இராமசுவாமி, பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுகச் செயலருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் புதிய பாடப்பிரிவுகளை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்துப் பேசினார். 

விழாவில் அவர் பேசுகையில், இப்பகுதி பழங்குடியின மாணவியர்களின் பெற்றோர்களிடம் இருந்து கலைப் பாடப்பிரிவு தொடங்க நீண்டநாட்களாக கோரிக்கை இருந்து வந்தது. இதனையடுத்து தற்போது பள்ளிக் கல்வித்துறை இரு கலைப்பாடப்பிரிவுகள் துவங்க அனுமதித்துள்ளது.  

தற்போது மருத்துவம், பொறியியல் கல்லூரி செல்வதற்கு அரசு பள்ளி மாணவ மாணவியர்களுக்கு அரசு 7.5 சத இடஒதுக்கீட்டின் கீழ் முன்னுரிமை அளி்க்கிறது.  இது போன்ற வாய்ப்புகளை அரசுப்பள்ளி மாணவியர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பெற்றோர், ஆசிரியர்களுக்கு மதிப்பளித்து வாழ்வில் முன்னேற வேண்டும்.

மாணவர்களுக்கு சத்துணவு கொடுப்பது அவசியம் எனக் கருதி ஆரம்பப்பள்ளியில் படிப்பவர்களுக்கு கூட காலை உணவுத் திட்டம் தமிழக அரசால் தற்போது வழங்கப்பட்டுள்ளது. கல்வியின் முக்கியத்துவம் கருதி இது போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

தற்போது இப்பள்ளியில் தொடங்கப்பட்டுள்ள இந்த புதிய இரு பாடப்பிரிவுகளிலும் வரும் ஆண்டில் முதல் மூன்று முதலிடம் இடங்களில் தேர்வு பெறுபவர்களின் மேற்கல்விச்செலவை நான் ஏற்கிறேன் என்றும் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் உறுதியளித்துப் பேசினார்.

தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர், பொதுமக்கள் என பலரும் பங்கேற்றனர்.

தலைப்புச்செய்திகள்