Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வித்யாசாகர் சிலை உடைக்கப்பட்டதில் தடயங்களை அழிக்க போலீஸ் முயற்சி: பிரதமர்

மே 17, 2019 05:25

மதுராபூர்: மேற்குவங்காள மாநிலம் மதுராபூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது. கொல்கத்தாவில் வன்முறையில் ஈடுபட்டது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் குண்டர்கள் தான். அவர்கள்தான் ஈஸ்வர் சந்திரா வித்யாசாகர் சிலையை உடைத்தனர். போலீஸ் அதிகாரிகள் திரிணா முல் காங்கிரஸ் குண்டர்களை பாதுகாக்க, சிலை உடைப்புக்கான தடயங்களை அழிக்க முயற்சி செய்கிறார்கள்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், அதன் குண்டர்களும் மேற்குவங்காளத்தை நரகமாக்கிவிட்டார்கள். வித்யாசாகர் சிலையை உடைத்தவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.

விரைவில் கிடைக்க இருக்கும் தோல்வியால் மம்தா பானர்ஜி முகத்தில் விரக்தி தெரிகிறது. அதானாலேயே அவர் என்னை சிறையில் அடைப்பேன் என மிரட்டுகிறார். அத்தை-மருமகன் ஜோடி (மம்தா-அபிஷேக் பானர்ஜி) மேற்குவங்காளத்தை கொள்ளையடிப்பதிலேயே கவனம் செலுத்துகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் உத்தரபிரதேச மாநிலம் மாவு என்ற இடத்தில் பிரதமர் மோடி பேசும்போது, “நமது அரசு கொல்கத்தாவில் வித்யாசாகர் சிலையை பெரிய அளவில் பஞ்சலோகத்தில் செய்து அதே இடத்தில் நிறுவும். இதுவே திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்களுக்கு நாம் தரும் பதிலாக இருக்கும்” என்றார்.
 

தலைப்புச்செய்திகள்