Wednesday, 26th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அறநிலையத்துறை சார்பில் இலவச திருமணம்; அமைச்சர் மதிவேந்தன் பங்கேற்பு

செப்டம்பர் 12, 2023 02:00

நாமக்கல்: இந்து அறநிலையத் துறை சார்பில், வள்ளிபுரம் ஈஸ்வரன் கோயிலில், வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் இலவச திருமணத்தை நடத்தி வைத்து, மணமக்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்கி, வாழ்த்தினார். 

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டத்திற்கான இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில், 30 இலவச திருமணங்கள் நடத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. கடந்த ஜூலை 7 ஆம் தேதி பண்ணாரி மாரியம்மன் கோயிலில் 27 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது. 

மீதமுள்ள 3 ஜோடிகளில், 2 ஜோடிகளுக்கு ஈரோடு திண்டல் அருள்மிகு முருகன் கோயிலில் திருமணம் நடைபெற்றது. இலவச திருமண திட்டத்தின்கீழ், மீதமுள்ள ஒரு ஜோடிக்கு, நாமக்கல் மாவட்டம் வள்ளிபுரம், அருள்மிகு தான்தோன்றீஸ்வீரர் கோயிலில் திருமணம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தமிழக வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். பின்னர் அவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள பரிசுப் பொருட்களை அறநிலையத்துறை சார்பில் வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இலவச திருமணம் செய்து கொண்ட ஜோடிக்கு, தாலிக்கு 4 கிராம் தங்கம், ஒரு ஜோடி மெட்டி, பட்டுப்புடவை, ஜாக்கெட், பட்டு வேஷ்டி, சட்டை, துண்டு, கட்டில், மெத்தை, தலையணை, பெட்ஷீட், கிரைண்டர், மிக்ஸி, கேஸ் அடுப்பு, பீரோ, கை கடிகாரம், சாமி படம், குத்துவிளக்கு, சந்தன கிண்ணம், பூஜை தட்டு, பித்தளை மணி, குங்கும சிமிழ், போவனி, பால் குண்டா, சாப்பாடு தட்டு, டம்ளர், சொம்பு, சோப்பு, சீப்பு, சாம்பு, கண்ணாடி, டால்கம் பவுடர், பேஸ்ட், பிரஷ், மணப்பெண் அலங்காரப் பூ, வளையர், ஐ லைனர், ஐப்ரோ, லிப்ஸ்டிக், சேப்டி பின், ஹேர்பின், பொட்டு உள்ளிட்ட ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள பரிசுப் பொருட்கள்  வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், திரளான திமுகவினர் மற்றும் மணமக்களின் உறவினர்கள் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்