Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பாதுகாப்பு படையினருடன் துப்பாக்கி சண்டை: பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

மே 17, 2019 05:43

ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் கடந்த பிப்ரவரி மாதம் 14-ந் தேதி விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பிக்கொண்டிருந்த துணை ராணுவ வீரர்கள் பயணம் செய்த வாகனங்களை குறிவைத்து பயங்கரவாதிகள் கார் குண்டு தாக்குதல் நடத்தினர். இதில் 40 துணை ராணுவ வீரர்கள் கொன்று குவிக்கப்பட்டது நாட்டையே உலுக்கியது.

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிற ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது.

இந்த இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதிகள் மீண்டும் புல்வாமாவில் டெலிபோரா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படைக்கு உளவு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த வீடு அமைந்துள்ள பகுதியை உள்ளூர் போலீசாருடன் பாதுகாப்பு படையினர் நேற்று சுற்றி வளைத்தனர். முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அந்தப் பகுதியில் வசித்து வந்தவர்களை பாதுகாப்பு படையினர் பத்திரமாக அப்புறப்படுத்தினர்.

பாதுகாப்பு படையினரின் இந்த நடவடிக்கையை பயங்கரவாதிகள் மோப்பம் பிடித்தனர். அவர்கள் சுதாரித்துக்கொண்டு தங்கள் துப்பாக்கி களால் பாதுகாப்பு படை யினரை நோக்கி சரமாரியாக சுடத் தொடங்கினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் ஒரு படை வீரரும், ஒரு உள்ளூர்வாசியும் உயிரிழந்தனர். அவர்களில் படை வீரர் சிப்பாய் சந்தீப் என்றும், உள்ளூர்வாசி ரயீஸ் தர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

உடனே பாதுகாப்பு படையினர் ஆவேசத்துடன் பயங்கரவாதிகளை நோக்கி தாக்குதலை தொடங்கினர். இரு தரப்பினருக்கும் இடையே நீண்ட நேரம் துப்பாக்கி சண்டை தொடர்ந்தது. இதனால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் உருவானது. இந்த சண்டையின் முடிவில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்கள், புல்வாமா கரீமாபாத் நசீர் பண்டித், சோபியன் உமர் மிர், பாகிஸ்தான் காலித் என தெரியவந்தது.

சம்பவ இடத்தில் இருந்து ஏராளமான வெடிபொருட்களையும், தடயங்களையும் பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர். கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் உடல்கள் கைப்பற்றப்பட்டன. அவர்கள் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களில் தொடர்பு உடையவர்கள், போலீசாரால் தேடப்பட்டு வந்தவர்கள் என தகவல்கள் கூறுகின்றன. இதை போலீஸ் செய்தி தொடர்பாளர் ஒருவர் உறுதி செய்தார். துப்பாக்கி சண்டை நடந்த இடத்தில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

தலைப்புச்செய்திகள்