Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாமக்கல் டிரினிடி மகளிர் கல்லூரியில் தமிழ்த்துறையின் பன்னாட்டுக் கருத்தரங்கு

செப்டம்பர் 21, 2023 05:25

நாமக்கல்: நாமக்கல் டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறையின் சார்பில் “பண்பாட்டு நோக்கில் தமிழியியல்” என்ற தலைப்பிலான சர்வதேசக் கருத்தரங்கு 20.09.2023 அன்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தஞ்சாவூர் - தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் வி.திருவள்ளுவன் கலந்து கொண்டார். பிறப்பு என்பது நம் கையில் இல்லை. நாம் ஏழையாக பிறந்து விட்டோம், கிராமத்தில் குடியிருக்கிறோம், அழகாக இல்லை என்பதெல்லாம் நமக்கு முக்கியமில்லை.

மேலும் பல கோடி பேர் வழிபடும் கடவுள்கள் கிருஷ்ண பகவான் பிறந்தது ஒரு சிறைச்சாலையில் தான், அதே போல இயேசு நாதர் பிறந்ததும் மிருகங்கள் உள்ள தொழுவத்தில் தான். மகளிர் நன்கு படிக்க வேண்டும். தற்கால தொழில்நுட்பம் வளர்ச்சி பெற்று வருவதால் மகளிர் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

நாம் கற்கும் பல்கலைக் கழகம் வழங்கும் கல்வி மட்டுமே நமக்கு உதவாது, இதோடு பிற தகவல்களையும் அறிந்து கொள்ளல் அவசியம் என்று அவர் தன் உரையில் குறிப்பிட்டார். 
மற்றொரு சிறப்பு அழைப்பாளர் இலங்கை - பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முதுநிலை விரிவுரையாளர் எம்.எம்.ஜெயசீலன் தன் சிறப்புரையில் குறிப்பிடுகையில் அக்காலப் பாடத்திட்டத்திற்கும், தற்போதுள்ள பாடத்திட்டத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.

அக்காலத் தமிழர்கள் இலக்கணம், இலக்கியம் சார்ந்த பாடங்களை படித்தனர். தற்போது கணினித் தமிழ், அறிவியல் தமிழ், தொழில்நுட்பத் தமிழ், மொழிப் பெயர்ப்புத் தமிழ் என தமிழ் வளர்ந்து வருகிறது என்றார்.

இந்நிகழ்வில் நிறைவுரை வழங்கிய தமிழ்த்திரைப்பட பாடலாசிரியர் தனிக்கொடி தன் உரையில் குறிப்பிடுகையில் மனித நேயம் என்பது தான் பண்பாடு. மகளிர் அடிமையாக இருந்த காலம் மலையேறி விட்டது. தற்காலப் பெண்கள் பல்வேறு துறைகளில் தடம்பதித்து வருகிறார்கள் என்றார்.

தொகுப்புரை வழங்கிய கடலூர் - பெரியார் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர் ஜா.ராஜா குறிப்பிடுகையில் பெண்கள் படித்ததால் தான் இந்த சமுதாயம் மிக வேகமாக முன்னேறி வருகிறது என்றார்.

இந்நிகழ்வில் டிரினிடி அகாடமி இயக்குநர்கள் டி.சந்திரசேகரன், பி.தயாளன், கல்லூரி செயல் இயக்குநர் அருணா செல்வராஜ், முதல்வர் எம். ஆர்.லட்சுமிநாராயணன், இயக்குநர் உயர்கல்வி அரசுபரமேசுவரன், தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் டி.கே.அனுராதா, ஆர்.சாவித்திரி, எஸ்.ஜெயமதி, ஏ.லதா, பி.விஷ்ணுபிரியா, சி.கோபியா, ஆர்.ஏ.அனிதா, எஸ்.ஹேமலதா, கே.பாரதி, டி.கீதா, கே.பத்மாவதி, என்.சுபலட்சுமி மற்றும் நிர்வாக அலுவலர் என்.எஸ்.செந்தில்குமார் ஆகியோர் பேசினர்.

பழந்தமிழர்களின் பெருமைகளை பறைசாற்றும் வகையில் தமிழ்த்துறை மாணவியர் மற்றும் பேராசிரியப் பெருமக்கள் கண்காட்சி அமைத்திருந்தனர். 

இதில் பழந்தமிழர்கள்; பயன்படுத்திய மூலிகை மருத்துவம், சித்த மருத்துவம்,விவசாயக் கருவிகள், மரப்பொருட்கள், மண்பாண்டங்கள், திண்பண்டங்கள், பழங்கள் மற்றும் கிழங்குகள் வகைகள், பித்தளை, செம்பு, வெண்கலம் மற்றும் மரப்பொருட்கள், அளவீட்டுக் கருவிகள், ரூபாய் நோட்டுக்கள், பழங்கால நாணயங்கள், இசைக்கருவிகள், விளைப்பொருட்கள், ஒப்பனைப் பொருட்கள், சிறுதானியங்கள், ஐவகை நிலங்கள், ஆபரணங்கள், மூங்கில் பொருட்கள், முக்கனிகள் ஆகியவை பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன. 

இந்நிகழ்வில் இலங்கை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 1000 க்கும் மேற்பட்ட பேராசிரியப் பெருமக்களும், மாணவர்களும் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்