Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சத்துணவு முட்டை ஒப்பந்தம் ரூ. 5.80 க்கு மேல் வழங்க பண்ணையாளர்கள் கோரிக்கை

அக்டோபர் 05, 2023 08:06

நாமக்கல்: சத்துணவு முட்டை ஒப்பந்தம் ரூ. 5.80 க்கு மேல் வழங்க பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சத்துணவு திட்டத்தில், கடந்த ஆண்டு செய்யப்பட்ட ஒப்பந்தம் மூலம், பண்ணையாளர்களுக்கு ரூ. 1,200 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

அதனால், நடப்பு ஆண்டு, உற்பத்தி மற்றும் போக்குவரத்து செலவை கணக்கிட்டு, ஒரு முட்டைக்கு ரூ. 5.80 பைசாவிற்கு கீழ் கேட்கப்படும் ஒப்பந்த புள்ளிகளை நிராகரிக்க வேண்டும். கோழிப்பண்ணையாளர்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.

இது குறித்து, நாமக்கல் மண்டல முட்டை கோழிப் பண்ணையாளர்கள், நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

இந்திய அளவில் முட்டை உற்பத்தியில், நாமக்கல் முதன்மையான பகுதியாக உள்ளது. முட்டை உற்பத்தி செய்யும் கோழிப் பண்ணைத் தொழில், நேரடியாகவும், மறைமுகமாகவும், சுமார் 10 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக விளங்குகிறது.

முட்டை உற்பத்தி செலவை விட குறைந்த விலையே கடந்த பல ஆண்டுகளாக கிடைத்ததால், இத்தொழில் நலிவடையும் நிலையில் உள்ளது. அதற்கு முக்கிய காரணம் தமிழக அரசின், சத்துணவு டெண்டரில் கோரப்படும் விலை.

சத்துணவு முட்டைக்கு உற்பத்தி செலவை விட மிக குறைந்த விலையை குறிப்பிடும் நிறுவனங்கள், பின்னர் பண்ணையாளர்களிடம் பேரம் பேசி மிக மிக குறைந்த விலையில் முட்டையை கொள்முதல் செய்கின்றன.

அதனால், பண்ணையாளர்கள் கேட்கும் விலைக்கு முட்டையை தர முடியாத நிலையில், வேறு மாநில முட்டையை கொள்முதல் செய்து சத்துணவு முட்டைக்கு அனுப்புகின்றனர். அதனால், நாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம்.

முட்டையின் உற்பத்தி, குறைந்த பட்ச அடக்கவிலை ரூ. 5 ஆகும். சத்துணவு சப்ளைக்கான போக்குவரத்து மற்றும் இதர செலவினங்களையும் சேர்த்து, 80 பைசா ஆகிறது. குறைந்த பட்ச ஏல புள்ளி ரூ 5.80 பைசாவிற்கு மேல் இருக்க வேண்டும். இவ்வாறு இருந்தால் மட்டுமே பண்ணையாளர்களை மிகப்பெரிய நஷ்டத்தில் இருந்து காப்பாற்ற முடியும்.

கடந்த, 2022 ல், சத்துணவு முட்டைக்கான ஒப்பந்தம் செய்ததில், பண்ணையில் உற்பத்தியாகும் அனைத்து முட்டைகளுக்கும் முட்டை ஒன்றுக்கு, ஒரு ரூபாய் வீதம், ஆண்டு முழுவதும், 1,200 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இந்த நஷ்டத்தினால் ஏற்பட்ட கடனில் இருந்து மீள முடியாமலும், பண்ணையை சரியாக நடத்த முடியாமலும் மிகவும் சிரமப்பட்டு, மன உளைச்சலுடன் பண்ணையாளர்கள் நடத்திக் கொண்டிருக்கிறோம்.

மேலும், இந்த ஆண்டும் குறைவான ஒப்பந்த புள்ளிக்கு டெண்டர் ஒப்பந்தம் செய்யப்பட்டால், பண்ணையாளர்களின் வாழ்வாதாரமும், தொழிலும் முழுவதுமாக முடங்கி விடும்.

அதனால், இந்த தொழிலை நம்பி உள்ள, 10 லட்சத்திற்கும் மேற்பட்ட நேரடி மற்றும் மறைமுக தொழிலாளர்கள் குடும்பத்தின் வாழ்வாதாரமும் இழந்துவிடும் அபாயம் உள்ளது. சத்துணவு முட்டைக்கு உற்பத்தி செலவு மற்றும் போக்குவரத்து செலவு உள்பட அனைத்தையும் கணக்கிட்டு, 580 காசுக்கு கீழ் கேட்கப்படும் ஒப்பந்த புள்ளிகளை நிராகரிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்