Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புத்தாக்க மேம்பாட்டு நிகழ்ச்சி :  ஆட்சியர் பங்கேற்பு

அக்டோபர் 25, 2023 11:44

நாமக்கல்: புத்தாக்க மேம்பாட்டு திட்ட வழிகாட்டு நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா பங்கேற்று பேசினார்.

நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளியில், பயிற்சி ஆசிரியர்களுக்கான, பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்ட வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா தலைமை வகித்து அவர் பேசியதாவது, பள்ளிப் பருவத்திலேயே மாணவர்களை புத்தாக்க சிந்தனை உடையவர்களாக உருவாக்கும் நோக்கத்தில், பள்ளிப் புத்தாக்க மேம்பாட்டுத் திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் தொடங்கி வைத்துள்ளார்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களிடையே தொழில் முனைவோர் மனப்பான்மை வளர்ப்பதற்காக "பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டம்” செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் மூலம் பள்ளி மாணவர்களின் புதிய தொழில் கண்டுபிடிப்புக்களை ஊக்குவிப்பது, தொழில் முனைவோர் கலாச்சாரத்தை வளர்ப்பது, தொழில் முனைதல் மற்றும் தலைமைத்துவ பண்புகளை உருவாக்குதல் போன்ற பல்வேறு பயிற்சிகள் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

மேலும், இத் திட்டத்தினை தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனமான யுனிசெப் அறிவு சாரா நிறுவனம் மற்றும் பள்ளி கல்வித் துறையுடன் இணைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் ஒரு பள்ளிக்கு ஒரு பயிற்சி ஆசிரியர் வீதம் நியமிக்கப்பட்டு, ஒவ்வொரு பள்ளியிலும் 25 முதல் 30 மாணவர்கள் தேர்வு செய்து அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

இம்மாணவர்கள் 27.01.2023 அன்று சேலம் மாவட்டம், பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொண்டதில் மண்டல அளவிலான போட்டிக்கு 10 குழுக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சேலம் மாவட்டம், சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் 2022-2023 ஆம் ஆண்டிற்கான SIDP ZONAL LEVEL BOOTCAMP மண்டல அளவில் நடைபெற்ற போட்டியில் நாமக்கல் மாவட்டத்திலிருந்து தேர்வு செய்யப்பட்ட திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர் ஜனனி, மெர்சி, துர்காதேவி, லட்சுமி, பிரியலதா என்ற 5 மாணவிகள் மற்றும் வழிகாட்டி ஆசிரியர் வளர்மதி ஆகியோர் சமர்ப்பித்த நீர் தேங்கும் இடங்களில் குப்பைகளை அகற்றும் இயந்திரம் என்ற தலைப்பிலான ஆய்வறிக்கைக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுக்கள் கிடைக்கப் பெற்றது.

மேலும் இக்குழு 2022-2023 ஆம் ஆண்டிற்கான மாநில அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொண்டு முதல் 10 இடங்களில் வெற்றி பெற்றனர்.

கடந்த 27.06.2023 அன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற பன்னாட்டு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் நாள் விழாவில் பள்ளிப் புத்தாக்க மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வெற்றி பெற்ற திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு ரூ.1 லட்சம் பரிசாக தமிழ்நாடு முதல்வர் வழங்கினார்.

மாணாக்கர்களுக்கு புத்தக அறிவோடு செயல்முறை அறிவையும் வளர்க்க வேண்டியது அவசியமாகிறது. வருங்காலத்தில் சிறந்து விளங்கிட புதிய துறைகளை தேர்ந்தெடுத்து முழு ஈடுபாட்டுடன் கவனம் செலுத்த வேண்டும்.

அரசின் புதிய புதிய திட்டங்களை செயல்படுத்தும் போது ஆசிரியர்கள் மாணாக்கர்களுக்கு உரிய பயிற்சிகளை வழங்கி ஊக்குவித்து, சாதனையாளர்களை உருவாக்கிட வேண்டும்.

போட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில் சிறு வயது முதலே அவர்களது தனித் திறமையினை கண்டறிந்து ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும்.

இத்திட்டத்தில் கடந்த ஆண்டு அரசு பள்ளி மாணவியர்கள் பரிசு வென்றுள்ளனர். இதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கு எனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதே போன்று இந்த ஆண்டிலும் அதிக அளவில் மாணாக்கர்கள் பரிசுகளை வென்று நாமக்கல் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்திடும் வகையில் அனைத்து ஆசிரியர்களும் பணியாற்றிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உமா பேசினார்.

தலைப்புச்செய்திகள்