Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

235 பயனாளிகளுக்கு ரூ.3.83 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்

அக்டோபர் 29, 2023 04:42

நாமக்கல்: நாமக்கல் நகராட்சி, பரமத்தி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் மகளிர் திட்டம் சார்பில் 235 பயனாளிகளுக்கு ரூ.3.83 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தலைமை தாங்கினார். பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஸ் குமார், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.இராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

விழாவில் வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க  மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் ரூ.11.12 இலட்சம் மதிப்பீட்டில் 90 மாற்றுத் திறனாளிகளுக்கு காது கேளாதோருக்கான திறன் பேசி, ரூ.6.05 இலட்சம் மதிப்பீட்டில் 49 மாற்றுத்திறனாளிகளுக்கு கண் பார்வையற்றோருக்கான திறன் பேசி, ரூ.3.42 இலட்சம் மதிப்பீட்டில் 50 மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம், ரூ.6.42 இலட்சம் மதிப்பீட்டில் 6 மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி, ரூ.13,900/- மதிப்பீட்டில் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலி கருவிகள் மற்றும் மகளிர் திட்டம் சார்பில் ரூ.3.56 கோடி மதிப்பீட்டில் 35 மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த மகளிருக்கு சுய உதவிக் கடனுதவி என மொத்தம் 235 பயனாளிகளுக்கு ரூ.3.83 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. 

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக தனியே ஒரு துறையை ஏற்படுத்தி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி அவர்களின் உரிமையை பாதுகாத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்.  

தமிழ்நாடு முதலமைச்சர்  மாற்றுத்திறனாளிகள் நலத்துறையினை தனது கட்டுப்பாட்டிலேயே வைத்து அவர்களின் நலன் காக்க பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்.

கடைக்கோடியில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் தங்கள் தேவையான நலத்திட்ட உதவிகளை பெறுவதை உறுதி செய்திடும் நோக்கில் உரிமைகள் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாடு மாநிலம் தேர்வு செய்யப்பட்டு மேதகு குடியரசு தலைவர் அவர்களால் விருது வழங்கப்பட்டுள்ளது.

மேலும், நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்  மற்றும் நகர்ப்புர வாழ்வாதார இயக்கத்தின் கீழ் ஊரக மற்றும் நகர்ப்புரங்களில் 18 வயது முதல் 60 வயது வரையுள்ள 12 முதல் 20 மகளிரை கொண்டு மகளிர்சுய உதவிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது வரை ஊரக பகுதிகளில் 8527 குழுக்கள் மற்றும் நகர்ப்புர பகுதிகளில் 3549 குழுக்களும் மொத்தமாக 12076 மகளிர் சுய உதவிக் குழுக்கள் 1,36,705  உறுப்பினர்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் 35 மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த மகளிருக்கு ரூ.3.56 கோடி மதிப்பீட்டில் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. நலத்திட்ட உதவிகளை பெறும் பயனாளிகள் இதனை நல்ல முறையில் பயன் படுத்தி கொண்டு தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் நாமக்கல் நகர் மன்றத் தலைவர் து.கலாநிதி, துணைத் தலைவர் செ.பூபதி, மகளிர் திட்ட இயக்குநர் பிரியா, நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் மா.க.சரவணன், தனி துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பிரபாகரன் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் (பொறுப்பு) மகிழ்நன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்