Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அண்ணாமலைக்கு  ஈஸ்வரன் எம்.எல்.ஏ பதிலடி

நவம்பர் 02, 2023 11:43

திருச்செங்கோடு: நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ஒன்றியம் சிறு மொளசி ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொள்ள வந்த திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினரும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிப் பொதுச் செயலாளருமான ஈஸ்வரன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

சில நாட்களுக்கு முன் திருச்செங்கோடு வருகை தந்த அண்ணாமலை எம்.எல்.ஏ ஈஸ்வரன் குறித்து பேசியதற்கும்  பரமத்தில் நடந்த நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை கூறியது குறித்தும் கேட்டபோது எம்.எல்.ஏ ஈஸ்வரன் கூறியதாவது.

அன்புத்தம்பி அண்ணாமலை அவர்களே, உங்கள் உருட்டை வேறு யாரிடமாவது வைத்துக் கொள்ளுங்கள் எங்களிடம் உங்கள் பாட்சா பலிக்காது, கேள்விக்கு பதில் கூறுங்கள். சட்டமன்றத்தில் உதயநிதி குறித்து துதி பாடுவதாக நீங்கள் திருச்செங்கோட்டில் தெரிவித்தீர்கள். நீங்கள் சொல்வது பொய். அதற்கு ஆதாரம் இருந்தால் காட்டுங்கள் எனக் கூறினேன். ஆதாரத்தைக் காட்டாமல் ஏதேதோ பேசுகிறீர்கள் இந்த உருட்டு வேலையெல்லாம் வேற எங்காவது வைத்துக் கொள்ளுங்கள்எங்களிடம் செல்லாது, ரோப் கார் குறித்து நேற்று பரமத்தியில் கூறி உள்ளீர்கள் ரோப் கார் அமைப்பதில் குறித்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆய்வுக்குழு அமைக்கப்பட்டது.

ஆய்வுக்குழு ஆய்வு செய்தபின் ரோப் கார் அமைக்க சாத்தியமில்லை எனக் கூறியது, இதனைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறையிடம் சொல்லி நெடுஞ்சாலைத் துறை மூலம் மாற்றுப் பாதை அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அதற்கான ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது போல் ஏதாவது எங்களுடைய பணிகளில் குறை இருப்பின் சுட்டிக்காட்டுங்கள். நாங்கள் செய்கிறோம்.

வெறும் வாய்ஜாலம் மட்டும் தான் நீங்கள் காட்டி வருகிறீர்கள் இத்தனை ஊர்களுக்கு சென்று இருக்கிறீர்களே மத்திய அரசு பணிகள் நடக்கிறதே அதில் ஏதாவது குற்றம் குறைகள் இருக்கிறதா என ஆய்வு செய்திருக்கிறீர்களா? எவ்வளவு பணிகள் எந்த அளவுக்கு நடந்திருக்கிறது என ஆய்வு செய்திருக்கிறீர்களா? நீங்கள் ஐபிஎஸ் பதவியில் இருந்து பாஜகவை அண்டிப் பிழைக்க வந்தவர்கள். நாங்கள் பல நல அமைப்புகளாக இருந்து சிறுகச் சிறுக வளர்ந்து அரசியல் கட்சியாக உருவெடுத்தவர்கள். கொங்கு மண்டலத்தில் பிறந்த நீங்கள் மரியாதையாக பேசக் கற்றுக் கொள்ளுங்கள் உங்கள் பெற்றோர் உங்களை இப்படிப் பழக்கி இருக்க மாட்டார்கள் என நம்புகிறேன். இனியாவது கொங்கு மண்டலத்துக்கு உண்டான கலாச்சாரம், பண்பாட்டோடு தனிமனித மனம் புண்படாமல் அநாகரிகமான விமர்சனம் இல்லாமல் நாகரிகமாகப் பேசக் கற்றுக் கொள்ளுங்கள்.

நான் சட்டமன்றத்தில் உதயநிதியை புகழ்ந்து பேசியிருப்பதாக நிரூபித்தால் அதனை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன். உங்களோடு விவாதிக்கத் தயார் என அறிவித்த பிறகு வேறு விதமாகப் பேசுவது ஏற்புடையதல்ல. உங்கள் உருட்டுகளை எங்களிடம் வைத்துக் கொள்ளாதீர்கள் என கூறினார்.

தலைப்புச்செய்திகள்