Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தொடர் மழையால் வெள்ளப் பெருக்கு: பொதுமக்கள் அவதி

நவம்பர் 08, 2023 06:34

பள்ளிபாளையம்: நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே, இரவு முழுவதும் பெய்த கனமழையின் காரணமாக பள்ளிபாளையம் பிரதான சாலைப் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இந்நிலையில் அரசுப் பேருந்து வெள்ளத்தில் சிக்கிய நிலையில் தீயணைப்பு துறை வீரர்கள் 35-க்கும் மேற்பட்ட பயணிகளை பத்திரமாக மீட்டனர்.

மேலும் இந்த வெள்ளத்தின் காரணமாக அரசு வங்கி உள்ளிட்ட வர்த்தக வணிக கடை நிறுவனங்கள் 10-க்கும் மேற்பட்ட கடைகளில் வெள்ள நீர் சூழ்ந்தது.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம், குமாரபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக மாலை நேரத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

பெய்யத் தொடங்கிய மழையானது அதிகாலை வரை விடாமல் தொடர்ந்து பெய்தது. இந்நிலையில் பள்ளிபாளையம் பிரதான சாலை பகுதியில் அதிக அளவு மழையின் காரணமாக வெள்ளநீர் சூழ்ந்தது.

இதனால் பள்ளிபாளையம் பிரதான சாலையில் உள்ள மத்திய அரசின் வங்கியான ஸ்டேட் பேங்க் கிளை அலுவலகம் முன்பும், வர்த்தக வணிக நிறுவன கடைகள் மற்றும் வீடுகள் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்தது.

மேலும் அதிக அளவு நீர் சூழ்ந்ததின் காரணமாக, பேருந்துகள் இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்டவை செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் தொலைதூரங்களுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றது.

இதனிடையே அதிகாலை நேரத்தில் அரசுப் பேருந்து ஒன்று வெள்ளத்தில் சிக்கியது .அதில் உள்ள 35 பயணிகளை வெப்படை தீயணைப்பு துறை வீரர்கள் பத்திரமாக மீட்டனர் .

மேலும் வெள்ள நீரை வெளியேற்றும் பணியில் பள்ளிபாளையம் நகராட்சி ஊழியர்கள், மற்றும் மேம்பாலம் கட்டுமான பணி ஊழியர்கள் ஆகியோர் கூட்டு முயற்சியுடன் வெள்ள நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இதுபோல தீபாவளி பண்டிகை சமயங்களில் அதிகளவு மழை பெய்வது மற்றும் வெள்ள பாதிப்புகள் ஏற்படுவதும் தொடர்கதையாகி வருகிறது.

மழைநீர் வாய்க்கால்கள் அதிகளவு ஆக்கிரமிப்பு காரணமாக இதுபோன்று வெள்ளப்பெருக்கு ஏற்படுவதாக கடந்த காலங்களில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில் ,அதற்குரிய தீர்வுகள் மற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அப்போது இருந்த அரசுத்துறை அதிகாரிகள் கூறினர்.

ஆனாலும் மீண்டும் அதே போல இந்த ஆண்டு வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள், கடை வியாபாரிகள் மத்தியில் ஒருவித அதிருப்தியான நிலை உள்ளது.

மேலும் மேம்பாலம் அமைக்கும் பணிகள் காரணமாகவும் போதிய அளவில் சாக்கடையில் மழை நீர் செல்வதற்கான வழித்தடங்கள் இல்லாததாலும் இந்த இந்த வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்