Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஒரு ரூபாய் கூடுதல் கட்டணம் வசூல்: அரசு போக்குவரத்து கழகத்திற்கு ரூ. 5 ஆயிரம் அபராதம்

நவம்பர் 08, 2023 07:55

நாமக்கல்: நாமக்கல்லில் ரூ.1 கூடுதல் கட்டணம் வசூலித்ததாக அரசு போக்குவரத்து கழகத்திற்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

திருச்செங்கோடு அருகே உள்ள சீதாராம்பாளையம் ராயல் நகரில் வசித்து வருபவர் பாலசுப்பிரமணியம் (56). கடந்த 2019 ஏப்ரல் மாதத்தில் இவர் திருச்செங்கோட்டில் இருந்து எடப்பாடி வரை அரசு டவுன் பஸ்ஸில் பயணம் செய்துள்ளார்.

இதற்கு பஸ் கண்டக்டர் ரூ 17 கட்டணமாக வசூலித்துள்ளார். நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் ரூ 16 மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று பாலசுப்ரமணியம் கூறியும் அதனை கண்டக்டர் ஏற்கவில்லை.

திருச்செங்கோட்டில் இருந்து எடப்பாடி வரை நகரப் பேருந்துகளுக்கு 14 கட்டண ஸ்டேஜ்கள் மட்டுமே, ஆர்டிஓ மூலம் நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது என்றும் இதனால் 14 கட்டண ஸ்டேஜ்களுக்கு வரி ரூ.1 உட்பட பயண கட்டணமாக ரூ 16 மட்டுமே வசூல் செய்யப்பட வேண்டும் என்று தகவல் உரிமை சட்டத்தில் கூறப்பட்டிருந்தது.

இதனால் கூடுதலாக வசூல் செய்யப்பட்ட ரூபாய் ஒன்றையும், தமக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீட்டையும் வழங்குமாறு கடந்த 2019 ஆம் ஆண்டு பாலசுப்பிரமணியன் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் கோட்டத்தின் சார்பில், புதிய சங்ககிரி பேருந்து நிலையம் ஒரு ஸ்டேஜ் என்பது, பயண கட்டணம் நிர்ணயம் செய்யும் போது விடுபட்டு விட்டதால் கூடுதலாக ஒரு ரூபாய் அதற்கும் சேர்த்து வசூலிக்கப்பட்டது என்று கோர்ட்டில் வாதிடப்பட்டது.

விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று 7 ஆம் மாவட்ட நுகர்வோர் கோர்ட் நீதிபதி டாக்டர் ராமராஜ், உறுப்பினர் ரமோலா ஆகியோர் தீர்ப்பு வழங்கினார். அதில், பயணியிடம் கூடுதலாக கட்டணம் வசூலித்தது நேர்மையற்ற வணிக நடைமுறை என்றும், வழக்கு தாக்கல் செய்தவருக்கு கூடுதலாக வசூலிக்கப்பட்ட கட்டணம் ஒரு ரூபாயையும், மன உளைச்சலுக்கு இழப்பீடாகவும், வழக்கின் செலவு தொகையாகவும் ரூ. 5 ஆயிரத்தை, 4 வாரத்திற்குள் அரசு போக்குவரத்து நிறுவனம் வழங்க வேண்டும் என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், திருச்செங்கோட்டில் இருந்து எடப்பாடி வரை இயக்கப்படும் நகரப் பேருந்துகளில், வட்டார போக்குவரத்து அலுவலரால் நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணத்தை மட்டுமே பஸ் கண்டக்டர்கள் வசூலிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்