Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருச்செங்கோடு நகராட்சியில் மழைநீர் தேக்கம்: ஆட்சியர் ச.உமா ஆய்வு

நவம்பர் 08, 2023 08:21

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகராட்சி, வார்டு எண்.19, 21 மற்றும் திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியம் கருவேப்பம் பட்டி, தோக்கவாடி ஊராட்சி கொல்லம்பாளையம் ஆகிய பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதை மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா ஆய்வு மேற்கொண்டார். 

மேலும் இப்பகுதி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டுமெனவும், சிறப்பு மருத்துவ முகாம் நடத்தி பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்க வேண்டுமெனவும், தேவையான அத்தியாவசிய மருந்து பொருட்களை இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு உத்திரவிட்டார்.

மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, திருச்செங்கோடு நகராட்சி, வார்டு எண்.19 மற்றும் 21-ல், மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இப்பகுதியில் 80 மி.மீ மழை பொழிவின் காரணமாக தரைப் பாலத்தில் தற்காலிகமாக மழைநீர் தடையின்றி செல்ல நகராட்சி தலைவர், ஆணையர், பொறியாளர், வட்டாட்சியர் ஆகியோரது ஒத்துழைப்புடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கு நிரந்தர தீர்வாக மழை நீரானது சேகரமாகும் பகுதி வரை தங்கு தடையின்றி செல்ல ஏற்கனவே திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசின் பரிசீலனையில் உள்ளது. 

இதற்கான‌ அரசு அனுமதி பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும். இப்பகுதியில் உள்ள குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்படும்‌.

மேலும், இப்பகுதி தொடர் கண்காணிப்பில் உள்ளது. நெடுஞ்சாலைத் துறை மூலம் மழைநீர் தடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. 

இரயில்வே பாலத்திலும் தண்ணீர் சீராக செல்கிறது. நெடுஞ்சாலைத் துறை மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மழைக்காலங்களில் டெங்கு காய்ச்சலை தடுக்க சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சிகள், 19 பேரூராட்சிகள் மற்றும் 15 வட்டாரங்களில் உள்நோயாளிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா தெரிவித்தார்.

இந்த ஆய்வில், திருச்செங்கோடு நகராட்சி தலைவர் நளினி சுரேஷ்பாபு, ஆணையாளர் இரா.சேகர், பொறியாளர் சரவணன், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் ரியா, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்