Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நகராட்சி ஆணையரைக் கண்டித்து பாஜகவினர் திடீர் தர்ணா

நவம்பர் 08, 2023 08:40

குமாரபாளையம்: நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சி 33 வார்டுகளைக் கொண்ட நகராட்சியாகும். இந்த நகராட்சிக்கு சொந்தமான எரிவாயு மயானம் கலைமகள் வீதியில் உள்ளது. மயானத்தில் புதைப்பதற்கு தடைவிதித்து எரிவாயு  மயானம் மட்டுமே செயல்பட்டு வந்தது.  

இந்த நிலையில் கடந்த 31ஆம் தேதி நடைபெற்ற நகர்மன்ற கூட்டத்தில் எரிவாயு மயானத்தில் ஒரு பகுதியில் கிறிஸ்தவர்கள் கல்லறைத் தோட்டம் கட்ட அனுமதி வழங்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன் அடிப்படையில், அந்த பகுதியில் கல்லறை தோட்டம் கட்டுவதற்காக முன்னேற்பாடுகள் நடைபெற்றது. பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் இந்து கோவிலிலிருந்து பெறப்பட்ட மயானத்தில் கல்லறைத் தோட்டம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டு மயானத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் காவல் துறையினரும், வருவாய்த் துறையினரும்  பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு ஏற்பட்டதில் போராட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை நகர மன்றத்தில் போடப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்ய வலியுறுத்தி  நகராட்சி ஆணையாளரை சந்திக்கச் சென்ற பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளை நகராட்சி ஆணையாளர் சரவணன் சந்திக்க மறுத்ததாகத் தெரிகிறது.

இதனால் பாரதிய ஜனதா கட்சியின் நகர தலைவர் சேகர் தலைமையில் நகராட்சி நுழைவு வாயில் முன்பு தரையில் அமர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை அடுத்து நகராட்சி ஆணையாளர் போராட்டத்தில் ஈடுபட்ட பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளிடம் 31 ஆம் தேதி நகர் மன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ரத்து செய்யப்படும் என உறுதி அளித்தார்.

இதற்கான ஆவணம் வழங்குவதாகவும் அவர் உறுதி தெரிவித்ததின் அடிப்படையில் போராட்டத்தைக் கைவிட்டனர்.

பாரதிய ஜனதா கட்சியின் இந்த  போராட்டத்தால் நகராட்சி வளாகப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தலைப்புச்செய்திகள்