Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் 110 பெண் வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள்

மே 18, 2019 05:45

கொல்கத்தா: நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக அறிவிக்கப்பட்டன. கடைசி கட்ட தேர்தல் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 724 பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் 716 பேரில் 110 (15 சதவீதம்) பெண் வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளன. மற்ற 8 வேட்பாளர்களின் தகவல்கள் கிடைக்கவில்லை. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட 665 பெண் வேட்பாளர்களில் 87 பேர் (13 சதவீதம்) மீது மட்டுமே குற்ற வழக்குகள் இருந்தன.

இதில் 78 பேர் (11 சதவீதம்) மீது தீவிர குற்ற வழக்குகள் உள்ளன. கடந்த தேர்தலில் 51 பேர் (8 சதவீதம்) மீது குற்ற வழக்குகள் இருந்தன.

காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் 54 பேரில் 14 பேர் (26 சதவீதம்), பா.ஜ.க. வேட்பாளர்கள் 53 பேரில் 18 பேர் (34 சதவீதம்), பகுஜன் சமாஜ் வேட்பாளர்கள் 24 பேரில் 2 பேர் (8 சதவீதம்), திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்கள் 23 பேரில் 6 பேர் (26 சதவீதம்) மீது குற்ற வழக்குகள் உள்ளன.

இந்த தேர்தலில் 255 பெண் வேட்பாளர்கள் (36 சதவீதம்) கோடீஸ்வரர்கள் ஆவர். கடந்த தேர்தலில் 219 கோடீஸ்வர பெண் வேட்பாளர்கள் (33 சதவீதம்) போட்டியிட்டனர்.

இவர்களில் காங்கிரஸ் வேட்பாளர்கள் 44 பேர் (82 சதவீதம்), பா.ஜ.க. வேட்பாளர்கள் 44 பேர் (83 சதவீதம்), திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்கள் 15 பேர் (65 சதவீதம்), பகுஜன் சமாஜ் வேட்பாளர்கள் 9 பேர் (38 சதவீதம்) கோடீஸ்வர பெண்கள். இந்த தேர்தலில் பெண் வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.5.63 கோடி ஆகும். கடந்த தேர்தலில் இது 10.62 கோடியாக இருந்தது.

இந்த தகவலை ஜனநாயக சீர்திருத்தம் என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளது.

தலைப்புச்செய்திகள்