Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மத்திய அரசில் பங்கேற்க தி.மு.க. எதையும் செய்யும்: தமிழிசை

மே 18, 2019 05:57

ஆலந்தூர்: தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது. காங்கிரஸ் கட்சியே எதிர்பார்க்காத நிலையில் ராகுல்காந்தியை பிரதமராக அறிவித்தோம் என்று தி.மு.க. சொல்கிறது. பிரதமர் பதவி முக்கியம் அல்ல. மோடி ஆட்சி செய்யக்கூடாது என்கிறார்கள்.

மோடியை எதிர்க்க இத்தனை பேரும் ஒன்று சேரும்போதுதான் மோடி எவ்வளவு பலம் பொருந்திய தலைவர் என்பதை ஒப்புக்கொள்கின்றனர். ரஜினிகாந்த் சொன்னதுபோல், ஒருவரை எதிர்த்து பல பேர் கூடும்போதுதான் அந்த தலைவர் எவ்வளவு பலம் வாய்ந்தவராக இருக்கிறார் என்பது தெரிகிறது.

சந்திரசேகர ராவுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு நடக்கிறது. அதன்பிறகு சந்திரபாபு நாயுடுவை துரைமுருகன் சென்று பார்க்கிறார். அப்படியானால் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி பலமாக இல்லையா?. தி.மு.க.வுக்கு பலமுகங்கள் உண்டு. மத்தியில் ஆட்சியில் பங்கேற்க தி.மு.க. எதையும் செய்யும்.

பா.ஜனதாவுடன் தி.மு.க. பேசியது உண்மை. சந்திப்புக்கான ஆதாரங்களை தேவைப்படும்போது வெளியிடுவேன். காங்கிரஸ் கூட்டணியில் முழுமையாக ஈடுபாடு இல்லாமல் சந்திரசேகர ராவை சந்தித்தார்களே, அதேபோல் பா.ஜ.க.வுடனும் சந்திக்க முயற்சி நடந்து உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
 

தலைப்புச்செய்திகள்