Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பிரியங்கா பிரவேசம் பா.ஜனதாவைப் பாதிக்கும்?: கருத்துக்கணிப்பில் தகவல்

பிப்ரவரி 09, 2019 09:29

புதுடெல்லி: சோனியாகாந்தியின் மகன் ராகுல்காந்தி காங்கிரஸ் தலைவராக இருக்கும் நிலையில் மகள் பிரியங்கா காந்தியும் தீவிர அரசியலுக்கு வந்துள்ளார். பிரியங்காவை அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவராக கடந்த மாதம் 23-ந்தேதி ராகுல்காந்தி அறிவித்தார். 

உத்தரபிரதேச மாநிலத்தில் கிழக்கு பகுதியில் உள்ள 42 பாராளுமன்ற தொகுதிகள் பிரியங்காவுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு வந்து பிரியங்கா பணிகளை தொடங்கினார். இதற்காக அவருக்கு தனிஅறை ஒதுக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநில நிர்வாகிகளை அழைத்து முதல் கட்ட ஆலோசனை நடத்தினார். வருகிற 11-ந்தேதி அவர் உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் பொறுப்பாளராக முறைப்படி பொறுப்பேற்கிறார். அதன் பிறகு பிரியங்காவின் அரசியல் பணிகளில் விறுவிறுப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதற்கிடையே பிரியங்கா வருகையால் காங்கிரசில் புத்துணர்ச்சி பிறக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு சமீபத்தில் பதில் அளித்த ராகுல்காந்தி 2 மாத குறுகிய காலத்தில் எந்தவித அதிசயங்களையும் நிகழ்த்தி விட முடியாது என்று குறிப்பிட்டார். என்றாலும் ராகுலுவுடன் சேர்ந்து பிரியங்கா நாடு முழுவதும் பிரசாரம் செய்ய செல்வார் என்று கூறப்படுகிறது. 

பிரியங்காவின் நாடு தழுவிய பிரசாரம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சமீபத்தில் கருத்து கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. ஏ.பி.பி. நியூஸ்- சி வோட்டர் நிறுவனங்கள் சார்பில் இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. அந்த கருத்து கணிப்பில் பிரியங்கா அரசியல் பிரவேசம் தொடர்பாக பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. 

அதற்கு பொதுமக்கள் அளித்துள்ள பதில்கள் தொகுக்கப்பட்டு விடை காணப்பட்டுள்ளது. நேற்று அந்த கருத்து கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன. பிரியங்காவின் வருகையால் காங்கிரஸ் கட்சிக்கு நாடு முழுவதும் பலன் கிடைக்கும் என்று 50 சதவீதம் பேர் கூறி உள்ளனர். ஆனால் பிரியங்காவால் பெரிய அளவில் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது என்று 24 சதவீதம் பேர் கூறி உள்ளனர். 

பிரியங்கா வருகை உத்தர பிரதேச மாநிலத்துக்கு மட்டுமே கைகொடுக்கும் என்று 15 சதவீதம் பேர் கூறி உள்ளனர். பெரும்பாலானவர்கள் பிரியங்காவின் வருகையை ஆதரித்து கருத்து தெரிவித்து உள்ளனர். பிரியங்காவின் வருகையால் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆபத்து ஏற்படுமா? என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு 52 சதவீதம் பேர் பிரியங்காவால் பா.ஜனதாவுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறியுள்ளனர். 

உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணிக்கு பிரியங்காவால் பாதிப்பு ஏற்படும் என்று 32 சதவீதம் பேர் கூறி உள்ளனர். ஆனால் 8 சதவீதம் பேர் எந்த பாதிப்பு ஏற்படாது என்று கூறி இருக்கிறார்கள். 

பிரியங்காவின் கணவர் ராபர்ட்வதரோவிடம் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவது பற்றி கேட்கப்பட்டதற்கு அது பா.ஜனதாவுக்கு எதிராக அமைந்து விடும் என்று கருத்து கணிப்பில் தெரிய வந்தது. சுமார் 71 சதவீதம் பேர் ராபர்ட் வதேராவிடம் விசாரிப்பதால் பிரியங்கா மீது அனுதாபம் பிறக்கும் என்று கூறி உள்ளனர். பிரியங்கா அரசியலுக்கு வந்து இருப்பது சரியான கால கட்டமா? என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பெரும்பாலானவர்கள் பிரியங்கா முன்னதாகவே அரசியலுக்கு வந்து இருக்கலாம் என்று கூறி உள்ளனர். 

பிரியங்கா, இந்திராகாந்தி போல் இருப்பது பலமா? பலவீனமா? என்று மற்றொரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பெரும்பாலானவர்கள் பலம் என்று பதில் அளித்துள்ளனர். இந்திரா காந்தி போன்றே பிரியங்காவின் செயல்பாடுகள் இருப்பதாக 44 சதவீதம் பேர் கூறி உள்ளனர். ஆனால் இந்திராகாந்தி அளவுக்கு பிரியங்கா செயல்பட முடியாது என்றும் கணிசமானவர்கள் தெரிவித்துள்ளனர். இந்திரா காந்தியுடன் பிரியங்காவை ஒப்பிட முடியாது என்று 42 சதவீதம் தெரிவித்தனர். 

பிரியங்கா அரசியலுக்கு வரவேண்டியதன் அவசியம் என்னவாக இருக்கும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்? என்றும் பொதுமக்களிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பெரும்பாலானவர்கள் ராகுல்காந்தியால் மக்களை கவர இயலவில்லை. எனவே பிரியங்கா வந்துள்ளார் என்று கூறி உள்ளனர். ராகுல் பேச்சு மக்கள் மத்தியில் எடுபடாததால் தான் பிரியங்கா அரசியல் பிரவேசம் செய்து இருப்பதாக 50 சதவீதம் பேர் கூறி உள்ளனர். பிரியங்காவுக்கு பதவி கொடுத்து இருப்பதும் இதனால்தான் என்று கூறியுள்ளனர். 
 

தலைப்புச்செய்திகள்