Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆவணமின்றி இயக்கிய 68 வாகனங்கள் பறிமுதல் நாமக்கல் வட்டார போக்குவரத்துதுறை அதிரடி

டிசம்பர் 05, 2023 03:08

நாமக்கல்: நாமக்கல் வட்டார போக்குவரத்து துறையினர் நடத்திய தணிக்கையின்போது, முறையான ஆவணம் இன்றி இயக்கப்பட்ட, 68 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை போக்குவரத்து ஆணையர் உத்தரவின்படியும், நாமக்கல் கலெக்டர் உமா அறிவுறுத்தலின் பேரிலும், நாமக்கல் மாவட்ட பகுதியில், கடந்த, நவம்பர் மாதம், வாகன தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

நாமக்கல் தெற்கு, வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர்கள் முருகன், முருகேசன் ஆகியோர் தலைமையில், திருச்செங்கோடு வட்டார போக்கு வரத்து அலுவலகம் மற்றும் அவற்றின் கட்டுப்பாட்டில் இயங்கும், ராசிபுரம், ப.வேலூர் அலுலகங்களில் பணியாற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் சக்திவேல், சரவணன், உமா மகேஸ்வரி, நித்யா ஆகியோர் அடங்கிய குழுவினர், வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

மொத்தம், 2,717 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. 488 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை அளிக்கப்பட்டது.

மேலும், ரூ. 3 லட்சத்து, 76 ஆயிரத்து 564 வரியும், ரூ. 7 லட்சத்து 33 ஆயிரத்து 800 இணக்கக் கட்டணமும் வசூல் செய்யப்பட்டது.

280 பேருக்கு ஹெல்மெட் அணியாமல், மொபைல் போன் பேசியபாடி வாகனத்தை ஓட்டியது, அதிகபாரம் ஏற்றிய வாகனங்கள், சீட்பெல்ட் அணியாமல் வாகனத்தை இயக்கியது, வாகனங்களில் அதிக ஆட்களை ஏற்றிச் சென்றது போன்ற குற்றங்களுக்காக, ரூ.13 லட்சத்து 300 இணக்க கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. 

வாகன தணிக்கையின் போது, போதிய ஆவணங்களான தகுதிச்சான்று புதுப்பிக்காமல், அனுமதிசீட்டு இல்லாமல், வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட, 68 வாகனங்களை பறிமுதல் செய்யப்பட்டு, வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், உச்சநீதிமன்ற சாலைபாதுகாப்பு குழுவின் உத்தரவின்படி, கடந்த, நவம்பர் மாதம், பல்வேறு குற்றங்களுக்காக, 109 பேரின் டிரைவிங் லைசென்ஸ் 3 மாதம் முதல் 6 மாதம் வரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தலைப்புச்செய்திகள்