Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரூ. 72 லட்சம் நிவாரணப் பொருட்களை அமைச்சர் மதிவேந்தன் அனுப்பி வைத்தார்

டிசம்பர் 07, 2023 12:18

நாமக்கல்: சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு, நாமக்கல்லில் இருந்து 6 லாரிகளில், ரூ. 72 லட்சம் மதிப்புள்ள, நிவாரணப் பொருட்ள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் கூறினார்.

2 நாட்களாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில், வங்கக் கடலில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் காரணமாக, தொடர்ந்து பெய்துவந்த வரலாறு காணாத மழையால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்கள், நாமக்கல்லில் உள்ள தமிழ்நாடு கோழிப்பண்ணயாளர்கள் சங்கத்தின் சார்பில் லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

சங்க அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட லாரியை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

நிகழ்ச்சியில் அரசு தலைமை கொறடா கோவி செழியன், மாவட்ட ஆட்சியர்  உமா, தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க தலைவர் சிங்கராஜ், செயலாளர் சுந்தரராஜ், பொருளாளர் இளங்கோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக முதல்வர் நேரடியாகச்சென்று உதவிகளை வழங்கி வருகிறார்.

அவரது உத்தரவின்பேரில், அமைச்சர்களும் பல்வேறு இடங்களுக்கும் சென்று நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஏற்பாட்டின் பேரில், மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், வணிகர் சங்கங்கள், சேவை சங்கங்கள் உள்ளிட்டோர் மூலம் நிவாரணப் பொருட்கள் சேகரிக்கப்பட்டன. 

ஒரே நாளில் அரிசி, பருப்பு, ரவை, சேமியா, சர்க்கரை, கோதுமை மாவு, எண்ணெய், துணிமணிகள், சோப்பு, பால் பவுடர் உள்ளிட்ட ரூ.72 லட்சம் மதிப்புள்ள அத்தியாவசியப் பொருட்கள் சேகரிக்கப்பட்டு, மொத்தம் 6 லாரிகளில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

சென்னைக்கு நாமக்கல் மாவட்டத்தில் இருந்த சென்ற லாரி முதலாவாதாக சென்று, மாநகராட்சிக்கு உட்பட்ட 14 வது மண்டலத்தில், பாதிக்கப்பட்டோருக்கு பொருட்களை விநியோகம் செய்துள்ளது.

தொடர்ந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பும் பணி தொடரும் என அமைச்சர் மதிவேந்தன் கூறினார்.

தலைப்புச்செய்திகள்