Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாமக்கல் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்: இராஜேஸ்குமார் எம்.பி மனுக்களை பெற்றார்

டிசம்பர் 19, 2023 04:02

நாமக்கல், டிச 19 - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  முன்னெடுப்பின் நீட்சியாக, அரசுத் துறைகளை அன்றாடம் அணுகும் பொதுமக்களுக்கு, அரசு அலுவலர்கள் வழங்கும் சேவைகளை மேலும் செம்மைப்படுத்தி, அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் அவர்களைச் சென்று சேரும் வகையிலும், நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்திடவும், திராவிட மாடல் ஆட்சியின் மற்றுமொரு மைல்கல்லாக “மக்களுடன் முதல்வர்” என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் கோயம்புத்தூரில் தொடங்கி வைத்தார்.

அதனைத்தொடர்ந்து நாமக்கல் நகராட்சி, துறையூர் சாலை, நகராட்சி மண்டபத்தில் நகராட்சி வார்டு எண்: 14, 15, 27, 28, 29, 30, 31, 32 ஆகிய பகுதிகளுக்கு நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன் அவர்கள் தலைமை தாங்கினார். நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் முன்னிலை வகித்தனர். கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் பார்வையிட்டு, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். 

இம்முகாமில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் தெரிவித்ததாவது, மக்கள் நலன் பெற வேண்டும். அரசின் திட்டங்களை பெற்று அவர்களின் வாழ்வு உயர வேண்டும். எந்த சூழ்நிலையிலும் அரசின் திட்டங்கள் கால தாமதமின்றி சென்றடைய வேண்டும் என்பது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கனவாகும். அதனடிப்படையில் “மக்களுடன் முதல்வர்” திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் தமிழ்நாடு முழுவதும் தொடங்கி வைத்துள்ளார். 
நாமக்கல் மாவட்டத்தில் "மக்களுடன் முதல்வர்" திட்டம் இன்று (18.12.2023) துவக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று முதல் 29.12.2023 வரை ஒன்பது நாட்கள் காலை 10 மணி முதல் மாலை 03.00 மணி வரை (அனைத்து வேலை நாட்களிலும்) நாமக்கல், இராசிபுரம், திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குமாரபாளையம் ஆகிய 5 நகராட்சிகள், 
19 பேரூராட்சிகள் ஆகிய இடங்களில் மொத்தம் 41 முகாம்கள் நடைபெற உள்ளது. 

தகுதியுள்ள அனைவருக்கும் அரசின் அனைத்து சேவைகளும் விரைவாக சென்றடைய வேண்டும் என்ற அடிப்படையில் இந்த முகாம்கள் நடத்தப்படுகிறது. மின்சார வாரியம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை / ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை, காவல் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை, ஆதிதிராவிடர் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை, வாழ்வாதார கடன் உதவிகள் ஆகிய துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு தங்கள் துறைக்குட்பட்ட மனுக்களுக்கு 30 நாட்களுக்குள் தீர்வு காணும் வகையில் இந்த முகாம்கள் நடைபெற உள்ளது.
பொதுமக்களிடம் வரவேற்பு பகுதியில் பெறப்படும் மனுக்கள் இத்திட்டத்திற்கென உருவாக்கப்பட்ட பிரத்யேக இணைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உடனடியாக ஒப்புகை சீட்டு வழங்கப்படும். இத்திட்டத்தின் பெறப்படும் மனுக்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். 

மாவட்ட ஆட்சித்தலைவர்  மக்களுடன் முதல்வர் திட்டம் குறித்து முன்னேற்பாடு கூட்டங்களை நடத்தி அரசுத்துறை அலுவலர்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கியுள்ளார். முகாம் நடைபெறும் இடத்திற்கு அருகாமையிலேயே பொதுமக்களின் இல்லம் இருக்ககூடும் என்பதால் தேவையான ஆவணங்கள் விடுப்பட்டிருப்பின் மீண்டும் சமர்பிக்க தேவையான கால அவகாசத்தினை அரசு அலுவலர்கள் வழங்கிட வேண்டும். பொதுமக்கள் இருக்கும் வரை இம்முகாம்கள் நடத்திட வேண்டும். இம்முகாமில் கலந்து கொள்ளும் அரசு அலுவலர்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது தீர்வு காணும் வகையில் தங்களது பணி இருக்க வேண்டும். மக்களுடன் முதல்வர் முகாமில் பெறப்படும் மனுக்கள் தீர்வு காணும் விகிதாச்சாரம் நாமக்கல் மாவட்டத்தில் 100 சதவிகிதம் என்ற வகையில் அமைய அரசு அலுவலர்கள் செயல்பட வேண்டும். அரசு அலுவலர்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான் இந்த இலக்கினை நாம் அடைய இயலும். அரசின் சேவைகளை பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதே அரசு அலுவலர்களின் தலையாய கடமையாகும். இதனை உணர்ந்து அரசு அலுவலர்கள் தங்களது பணியை மேற்கொள்ள வேண்டும்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கடந்த 
2 ஆண்டுகளில் நாமக்கல் நகராட்சியில் குடிநீர் வசதி, சாலை வசதி உள்ள அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இன்றைய  தினம் நடைபெறும் முகாமில் பெறப்படும் மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படும். எனவே, பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயனடையுமாறு கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்.பி தெரிவித்தார்.

இம்முகாமில் நாமக்கல் நகர்மன்ற தலைவர் து.கலாநிதி, துணை தலைவர் செ.பூபதி, வருவாய் கோட்டாட்சியர் நாமக்கல் மா.க.சரவணன், நாமக்கல் நகராட்சி ஆணையாளர் சென்னுகிருஷ்ணன், நாமக்கல் வட்டாட்சியர் சக்திவேல், நகர்மன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்