Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சத்தியமங்கலம் அருகே பனியன் கம்பெனி பெண் தொழிலாளி படுகொலை

மே 18, 2019 11:13

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அடுத்த சிக்கரசம்பாளையம் காலனியை சேர்ந்தவர் ஆறுமுகம். கூலி தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி (வயது25). இவர்களுக்கு புனிதா என்ற மகளும், சபரி என்ற மகனும் உள்ளனர்.

லட்சுமி சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரி அருகே உள்ள தனியார் பனியன் கம்பெனியில் தினசரி கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

லட்சுமி எப்போதும் காலையில் வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் சிக்கரசம்பாளையம் பிரிவு பஸ் நிறுத்தத்தில் வந்து இறங்குவார். பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு நடந்து செல்வது வழக்கம்.

நேற்றும் வழக்கம் போல் காலையில் வேலைக்கு சென்ற லட்சுமி மாலை வேலையை முடித்து சிக்கரசம்பாளையம் பிரிவு பஸ் நிறுத்தத்தில் வந்து இறங்கினார். பின்னர் அங்கிருந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருட்டான பகுதியில் நின்று கொண்டிருந்த மர்ம நபர் திடீரென லட்சுமியை பிடித்து இழுத்து அவரது கழுத்தை கத்தியால் அறுத்து விட்டு வேகமாக தப்பி ஓடிவிட்டார்.

இதில் லட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சத்தியமங்கலம் டிஎஸ்பி சுப்பையா இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து லட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் .

லட்சுமி கொலையுண்ட பகுதியில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்தப் பகுதியில் புதிதாக வாங்கப்பட்ட கத்தி ஒன்று இருந்தது. அதனை கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லட்சுமிக்கு தெரிந்த நபரே இந்த கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என்று தெரியவருகிறது. அவரது நடவடிக்கைகள் நன்கு தெரிந்து அவர் எங்கே எப்போது வருவார் என்று கண்காணித்து இந்த கொலையை அரங்கேற்றி உள்ளார்.

இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கொலையுண்ட பகுதியில் சில தடயங்கள் கிடைத்துள்ளன. அதனை வைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறும்போது, லட்சுமி கொலை செய்த நபர் அவரது நடவடிக்கைகள் நன்கு தெரிந்து அவரை பின்தொடர்ந்து கொலையை நிறைவேற்றி உள்ளார். எதற்காக இந்த கொலை நடந்தது என்று தெரியவில்லை. இன்னும் ஓரிரு நாளில் கொலையாளியை பிடித்து விடுவோம் என்றனர்.
 

தலைப்புச்செய்திகள்