Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அரவக்குறிச்சி தொகுதியில் ஆம்னி பஸ்களில் வந்த முஸ்லிம் வாக்காளர்களை அதிகாரிகள் மறித்து சோதனை

மே 20, 2019 05:28

அரவக்குறிச்சி: கரூர் மாவட்டம் அரவக் குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப் பதிவு நேற்று நடந்தது. காலை முதல் வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். இந்தநிலையில் அரவக்குறிச்சி தொகுதியில் ஓட்டுப்போடுவதற்காக வெளியூர்களில் இருந்து ஆட்களை அழைத்து வந்திருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விக்ரமனுக்கு புகார் வந்தது.

குறிப்பாக பள்ளப்பட்டிக்கு ஆட்கள் ஆம்னி பஸ்களில் அழைத்து வரப்பட்டிருப்பதாக அவருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து பள்ளப்பட்டி பகுதியில் தீவிர வாகன சோதனை நடத்தும்படி போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார். இதற்கிடையே திருச்சி மண்டல போலீஸ் ஐ.ஜி. வரதராஜூ, கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விக்ரமன் ஆகியோர் பள்ளப்பட்டி பகுதியில் பாதுகாப்பு பணிகளை பார்வையிட கார்களில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது பள்ளப்பட்டி அண்ணாநகர் பகுதியில் வரிசையாக 4 ஆம்னி பஸ்கள் வந்தன. இதைப்பார்த்த போலீசார் உடனடியாக அந்த ஆம்னி பஸ்களை வழிமறித்து தடுத்து நிறுத்தினர். அப்போது பஸ்களில் ஏறி போலீசார் சோதனையிட்டனர். அந்த பஸ்களில் அனைவரும் முஸ்லிம் வாக்காளர்களாக இருந்தனர். இதைத்தொடர்ந்து பஸ்களை அதே இடத்தில் நிறுத்தி அவர்கள் அனைவரும் உள்ளூரை சேர்ந்தவர்களா? என விசாரணை நடத்தினர்.

இதில் தாங்கள் ஓட்டுப்போடுவதற்காக சென்னை, மும்பை உள்ளிட்ட ஊர்களில் இருந்து மொத்தமாக புறப்பட்டு வந்திருப்பதாக தெரிவித்தனர். இருப்பினும் போலீஸ் அதிகாரிகள், தேர்தல் அதிகாரிகள் சந்தேகமடைந்தனர்.

தங்களுக்கு ஏராளமான புகார்கள் வந்திருப்பதால் தொகுதிக்கு சம்பந்தம் இல்லாத நபர்களை உள்ளே விட அனுமதிக்க விட முடியாது எனவும், பள்ளப்பட்டியை சேர்ந்தவர்கள் என்பதற்கான அடையாள அட்டை இருந்தால் அதனை காண்பிக்கும்படியும், மேலும் வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஆதார் அட்டை இருந்தால் காண்பிக்கும்படியும் அதிகாரிகள் கூறினர். இதனால் பஸ்களில் இருந்தவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதற்கிடையே வாக்களிக்க சொந்த ஊருக்கு ஆம்னி பஸ்களில் வந்தவர்களை வழிமறித்து அதிகாரிகள் சோதனையிடுவது குறித்து தகவல் அறிந்ததும் அவர்களது உறவினர்கள், உள்ளூர் பிரமுகர்கள், தி.மு.க. நிர்வாகிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு போலீஸ் சூப்பிரண்டு விக்ரமனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் போலீசார் ஒவ்வொருவரின் பெயரை சேகரித்து அனுப்பியபோது அவர்களிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த இடமே பரபரப்பானது. நோன்பு இருக்கும் நபர்களை துன்புறுத்துகிறீர்கள் என வாக்குவாதம் செய்தனர். பஸ்களில் வந்தவர்கள் பலர் தங்களது பெயர், விவரம் அடையாள அட்டையை காண்பித்த பின் அதே இடத்தில் இறக்கி விடப்பட்டனர்.

அவர்கள் அங்கிருந்து ஊருக்குள் செல்ல 3 கிலோ மீட்டர் தூரம் இருந்ததால் சிரமம் அடைந்தனர். அவர்கள் உடைமைகளை பஸ்களில் இருந்து கீழே இறக்கி வைத்து உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து வரவழைத்தனர். சிலர் தங்களது உடைமைகளை கையில் தூக்கியபடி நடந்து சென்றனர். இதனால் பஸ்களில் வந்தவர்கள் பஸ்களை பள்ளப்பட்டியின் ஊருக்குள் சென்று சோதனை நடத்தும்படி கூறினர். இதனால் 4 ஆம்னி பஸ்களையும் பள்ளப்பட்டி நகருக்குள் கொண்டு சென்று சோதனை நடத்தினர்.

இந்த சோதனை காலை 9.30 மணிக்கு தொடங்கி ஒரு மணி நேரத்துக்கு மேலாக நடந்தது. இறுதியில் பஸ்களில் வந்தவர்கள் அனைவரும் பள்ளப்பட்டியை சேர்ந்த உள்ளூர் வாக்காளர்கள் என்பது உறுதியானது. இதைத்தொடர்ந்து அவர்கள் அனைவரும் அனுமதிக்கப்பட்டனர்.

தலைப்புச்செய்திகள்