Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பள்ளிப்பாளையத்தில் தொழிலாளர்களின் வறுமையை பயன்படுத்தி  கிட்னி விற்பனை நடைபெறுவதாக எழுந்த புகாரால் பரபரப்பு

மே 30, 2024 01:11

 பள்ளிபாளையம், மே.30:  நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஒன்றியம் ஆலாம்பாளையம் பேரூராட்சியை சேர்ந்த ஆறாவது வார்டு கவுன்சிலர் பாலசுப்பிரமணியம் என்பவர் கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி, நாமக்கல் மாவட்ட ஆட்சியருக்கும், தமிழக முதல்வருக்கும், மாவட்ட காவல் துறை அதிகாரிக்கும் மனு ஒன்றை அனுப்பினார் .

அந்த மனுவில் பள்ளிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் விசைத்தறி தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களின் வறுமையை பயன்படுத்தி, உள்ளூரிலுள்ள ஒரு சிலர்  சிறுநீரக தானம் வழங்கினால், பணம் பெற்றுத்தரப்படும் என ஆசை வார்த்தை கூறி, அவர்களை மூளை சலவை செய்து சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு அழைத்துச் சென்று சிறுநீரகத்தைப் பெற்றுக் கொண்டு சிறுநீரகம் வழங்கும் தொழிலாளருக்கு குறிப்பிட்ட அளவில் தொகை வழங்கிக் கொண்டு, அழைத்துச் செல்லும் நபர்களும் கமிஷன் எடுத்துக் கொள்வதாகவும், எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்து இருந்தார். 

இந்த விவகாரம் நாமக்கல் மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பிய நிலையில் நாமக்கல் மாவட்ட எஸ்பி உத்தரவின் பேரில் திருச்செங்கோடு டிஎஸ்பி இமயவரம்பன் மற்றும் பள்ளிபாளையம் போலீசார் இதுகுறித்து விசாரணைகளை நடத்தி வரும் நிலையில் தற்போது பள்ளிபாளையம், குமாரபாளையம், சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், விசைத்தறி தொழிலில் ஈடுபட்டு வரும், பொருளாதார பாதிப்பில் உள்ள தொழிலாளர்களை ஆங்காங்கே உள்ள புரோக்கர்கள் மூளைச்சலவை செய்து பணத்தாசை காட்டி அவர்களை கேரள மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிறுநீரகம் பெறப்படுவதாக பிரபல தனியார் செய்தி நிறுவனத்தில் செய்தி வெளியாகி உள்ள நிலையில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 இது குறித்து முறையான நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை போலீசார் கைது செய்ய வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது. தொடர்ந்து சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாகவே பள்ளிபாளையம் குமாரபாளையம் பகுதிகளில் சிறுநீரகம் திருட்டு, கருமுட்டை விற்பனை உள்ளிட்டவை நடைபெறுவதாக புகார்  எழுந்த நிலையில்,இதில் ஒரு சிலர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது இந்த விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்புச்செய்திகள்