Saturday, 21st September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மணிச்சத்து  பெற டி.ஏ.பி உரத்துக்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்களை பயன்படுத்தலாம்:  விவசாயிகளுக்கு அறிவுரை

ஜுலை 31, 2024 10:00

தென்காசி: மணிச்சத்து என்று அழைக்கப்படும் பாஸ்பரஸ் சத்து பொதுவாக பயிர்களுக்கு அவசியமான சத்தாகும். மண் பரிசோதனை பரிந்துரைகளின் அடிப்படையில் மணிச்சத்து தேவையினை அறிந்து அதற்கு ஏற்ப மணிச்சத்து வழங்கும் உரங்களை சரியான அளவில் பயிர்களுக்கு கிடைக்கும்படியாக இடுவது அவசியமாகும்.

மணிச்சத்து தேவைக்கு பொதுவாக டி.ஏ.பி உரங்களை அடியுரமாக பயன்படுத்தும் பழக்கம் விவசாயிகளிடையே உள்ளது. டி.ஏ.பி உரத்தில் 18 சதவீதம் தழைச்சத்தும் 46 சதவீதம் மணிச்சத்தும் உள்ளது. ஆனால் அதற்கு மாற்றாக மணிச்சத்து மட்டும் 16 சதவீதம் கொண்ட சூப்பர் பாஸ்பேட் உரங்களை பயன்படுத்திவிட்டு தழைச்சத்து தேவைக்கு யூரியாவை பயன்படுத்தலாம் அல்லது தழை மற்றும் மணிச்சத்து ஆகியவற்றை வழங்கும் காம்ப்ளக்ஸ் உரங்கள் அல்லது தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்களை வழங்கும் காம்ப்ளக்ஸ் உரங்களையும் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தலாம்.

 காம்ப்ளக்ஸ் உரங்களில் தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்கள் எவ்வளவு உள்ளது என்பது உர மூடைகளில் குறிப்பிடப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக என்.பி.கே 17: 17 : 17 எனக் குறிப்பிடப்பட்டிருந்தால் அந்த உரத்தில் 17 சதவீதம் தழைச்சத்து, 17 சதவீதம் மணிச்சத்து மற்றும் 17 சதவீதம் சாம்பல்சத்து உள்ளது என பொருளாகும். 28:28:0 எனக் குறிப்பிடப்பட்டிருந்தால் 28 சதவீதம் தழைச்சத்து மற்றும் 28 சதவீதம் மணிச்சத்து ஆகியவை மட்டும் உள்ளது எனவும் சாம்பல்சத்து இல்லை எனவும் பொருளாகும்.

இவ்வாறு காம்ப்ளக்ஸ் உர மூடைகளில் குறிப்பிடப்பட்டுள்ள தழை, மணி, சாம்பல்சத்துக்கள் அளவுக்கு ஏற்ப பயிருக்கு தேவையான சத்துக்கள் வழங்கும் காம்ப்ளக்ஸ் உரங்களையும் டி.ஏ.பி -க்கு மாற்றாக சரியான அளவினை கணக்கிட்டு வாங்கி பயன்படுத்தலாம்.

மேலும் விபரங்களுக்கு தங்கள் பகுதியின் வேளாண்மைத்துறை அலுவலர்களை தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தலைப்புச்செய்திகள்