Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் அனைத்தும் தவறாகவே முடிந்துள்ளன: சசிதரூர்

மே 20, 2019 08:32

திருவனந்தபுரம்: நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. 7-வது கட்ட தேர்தல் நேற்றுடன்  முடிந்த  நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் நேற்று வெளியாகின. தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும் என்று கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுகின்றன. தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள் நம்ப முடியாதவையாக உள்ளது என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. 

அந்த வகையில், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான சசி தரூர், கருத்துக்கணிப்பு முடிவுகள் அனைத்தும் தவறாகவே முடிந்துள்ளன என்று தெரிவித்துள்ளார். 

இது குறித்து சசிதரூர் கூறும்போது, “ தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் அனைத்தும் தவறாகவே முடிந்துள்ளதாகவே நான் நம்புகிறேன். கடந்த வார இறுதியில், ஆஸ்திரேலியாவில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தவறாக அமைந்தது நிரூபணம் ஆனது. இந்தியாவில், மீண்டும் அவர்கள் (பாஜக) ஆட்சி அமைத்துவிடக்கூடும் என்ற அச்சத்தில் கருத்துக்கணிப்பு  நடத்தியவர்களிடம் பலர் உண்மையை கூறவில்லை. எனவே, உண்மையான முடிவுகளுக்காக நாம் 23-ம் தேதிவரை காத்திருப்போம்” என்றார். 

ஆஸ்திரேலியாவில் நடந்தது என்ன?

ஆஸ்திரேலியாவில் அண்மையில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. 151 இடங்களைக் கொண்ட அந்த நாட்டின் நாடாளுமன்றத்துக்கு மே மாதம் 18-ந்தேதி பொதுத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் பிரதமர் ஸ்காட் மோரிசனின் லிபரல் கட்சி தேசிய கூட்டணிக்கும், பில் சார்ட்டன் தலைமையிலான தொழிற்கட்சிக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவியது. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்க 76 இடங்களில் வென்றாக வேண்டும். 

ஓட்டுப்பதிவு முடிந்ததும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகின. அதில் எதிர்க்கட்சியான தொழிற்கட்சிக்கு 52 சதவீதத்தினரின் ஆதரவும், ஆளும் லிபரல் கட்சி தேசிய கூட்டணிக்கு 48 சதவீதத்தினரின் ஆதரவும் உள்ளது என தகவல் வெளியானது.

இந்நிலையில் கருத்துகணிப்புக்களை எல்லாம் தவிடு பொடியாக்கி பிரதமர் ஸ்காட் மோரிசன் தலைமையிலான ஆளுங்கட்சியே மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. தேர்தல் முடிவை தொடர்ந்து தொழிற்கட்சியின் தலைவர் பதவியில் இருந்து சார்ட்டன் அதிரடியாக விலகினார்.

தலைப்புச்செய்திகள்