Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

டெல்லியில் இன்று பா.ஜனதா கூட்டணி கூட்டம்: தமிழக தலைவர்களுக்கு அழைப்பு

மே 21, 2019 06:24

சென்னை: தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது. பிரதமர் நரேந்திர மோடியின் நல்ல திட்டங்கள் தொடர வேண்டும். நாங்கள் சொன்னது போன்று, வேண்டும் மோடி. மீண்டும் மோடி என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்துக்கணிப்பில் தவறு நடந்திருந்தால் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறும் இடங்கள் அதிகரிக்குமே தவிர குறையாது. மத்தியில் நிச்சயம் பா.ஜ.க. கூட்டணி தான் ஆட்சி அமைக்க போகிறது.

பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணிக்கு டெல்லி அசோகா ஓட்டலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடக்கிறது.

இந்த கூட்டத்தில் தமிழகத்தில் இருந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், டாக்டர் ராமதாஸ் அல்லது டாக்டர் அன்புமணி ராமதாஸ், பிரேமலதா விஜயகாந்த், எல்.கே.சுதீஷ், டாக்டர் கிருஷ்ணசாமி, ஜி.கே.வாசன், பெஸ்ட் ராமசாமி, சரத்குமார், ஜான் பாண்டியன், கார்த்திக், என்.ஆர்.தனபாலன், பூவை ஜெகன்மூர்த்தி, தேவநாதன் யாதவ் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

இவர்கள் தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்திலும், தேர்தல் பணியிலும் மிகச்சிறப்பாக செயலாற்றினார்கள். அதனால் இவர்களுக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பா.ஜ.க. ஒரு கூட்டத்தை நடத்த வேண்டும் என்று நினைத்தால் கூட்டிவிடுவோம். காங்கிரஸ் தலைமையில் 23-ந்தேதி கூட்டம் என்று சொன்னார்கள். அப்புறம் 24-ந்தேதி என்று சொன்னார்கள். அவர்களால் கூட்டத்தை கூட்டவே முடியாது. காங்கிரஸ் கூட்டணி தோல்வி அடையப் போகிறது. எனவே அவர்கள் கூட்டம் கூட்டினாலும் எந்த பயனும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்