Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புதுவை நாடாளுமன்ற தொகுதியில் வைத்திலிங்கம் (காங்கிரஸ்) அமோக வெற்றி

மே 24, 2019 07:50

புதுச்சேரி: புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வைத்திலிங்கம் (காங்), நாராயணசாமி(என்.ஆர்.காங்), எம்.ஏ.எஸ். சுப்ரமணியன்(மக்கள் நீதி மய்யம்), தமிழ்மாறன் (அ.ம.மு.க.), ஷர்மிளாபேகம் (நாம் தமிழர் கட்சி) உள்பட 18 பேர் போட்டியிட்டனர். தொகுதி முழுவதும் மொத்தம் 970 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. 

81.19 சதவீதம் வாக்குகள் பதிவாகின. புதுவையில் உள்ள 23 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் லாஸ்பேட்டை மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியிலும், மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக் கல்லூரியிலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தன. காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் பகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு எந்திரங்கள் அந்தந்த இடங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

புதுவை நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. 8 உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் முன்னிலையில் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் 335 வாக்குகள் பெற்றார். என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி 112 வாக்குகள் பெற்றார். இதில் வைத்திலிங்கம் 223 வாக்குகள் அதிகம் பெற்றார்.

அதன்பின் பாதுகாப்பு அறையில் இருந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வரப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்டன. முதல் கட்டமாக மண்ணாடிப்பட்டு, மங்கலம், கதிர்காமம், காமராஜ் நகர், லாஸ்பேட்டை, உப்பளம், நெல்லித்தோப்பு, ஏம்பலம், நெடுங்காடு, காரைக்கால் வடக்கு, மாகி, ஏனாம் ஆகிய 12 தொகுதிகளில் எண்ணப்பட்டன. ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வைத்திலிங்கம் தொடக்கம் முதலே முன்னிலையில் இருந்து வந்தார்.

12 தொகுதிகளில் மொத்தம் 3,12,402 வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் காங்கிரஸ் கட்சிக்கு 1,81,398 வாக்குகளும், என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 93,496 வாக்குகளும் கிடைத்தன. காங்கிரஸ் கட்சி 87,902 வாக்குகள் முன்னிலை பெற்றது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணிய பின்னர் ஒரு தொகுதிக்கு 5 வி.வி.பாட் எந்திரங்களில் உள்ள ஒப்புகைச் சீட்டுகளை எண்ணிய பிறகு அதனை ஒப்பிட்டு பார்த்து விட்டு அதன் பிறகே அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அடுத்த கட்டமாக திருபுவனை, வில்லியனூர், இந்திராநகர், முத்தியால்பேட்டை, காலாப்பட்டு, உருளையன்பேட்டை, அரியாங்குப்பம், நெட்டப்பாக்கம், திருநள்ளாறு, காரைக்கால் தெற்கு ஆகிய 10 தொகுதிகள் எண்ணப்பட்டன. 3-வது கட்டமாக ஊசுடு, உழவர்கரை, தட்டாஞ்சாவடி, ராஜ்பவன், முதலியார்பேட்டை, மணவெளி, பாகூர், நிரவி டி.ஆர். பட்டினம் ஆகிய 8 தொகுதிகள் எண்ணப்பட்டன.

அமோக வெற்றி முடிவில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் விவரம் வருமாறு:-

வைத்திலிங்கம் (காங்கிரஸ்) -4,44,981

நாராயணசாமி(என்.ஆர்.காங்கிரஸ்) -2,47,956

எம்.ஏ.எஸ்.சுப்ரமணியன் (மக்கள் நீதி மய்யம்) - 38,068

ஷர்மிளா பேகம் (நாம் தமிழர் கட்சி) - 22,857

தமிழ்மாறன் (அ.ம.மு.க.) -4,791

நோட்டா- 12,199

இதில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி வேட்பாளர் நாராயணசாமியை விட வைத்திலிங்கம் (காங்) 1,97,025 வாக்குகள் அதிகம் பெற்று இருந்தார். இதனால் அவரது வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று (வெள்ளிக்கிழமை) காலை வெளியிடப்படுகிறது. அ.ம.மு.க. வேட்பாளருக்கு நோட்டாவுக்கு கிடைத்த வாக்குகளை விட குறைவான வாக்குகளே கிடைத்துள்ளது.

தலைப்புச்செய்திகள்