Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மோடி மீண்டும் பிரதமராக மக்கள் வழங்கிய தீர்ப்புக்கு தலை வணங்குகிறேன்: நாராயணசாமி வாழ்த்து

மே 24, 2019 07:54

புதுச்சேரி: முதல்-அமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது. புதுவை நாடாளுமன்ற தொகுதியில் வைத்திலிங்கம் போட்டியிட்டார். அவருக்கு கை சின்னத்தில் வாக்களித்து வரலாறு காணாத அளவிற்கு வெற்றி பெறச் செய்த புதுவை மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

தட்டாஞ்சாவடி சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் வெங்கடேசனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து அவரை வெற்றி பெறச்செய்த தொகுதி மக்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

எங்களது கூட்டணி கட்சி தலைவர்கள் மீதும், எங்களது கூட்டணி அரசின் செயல்பாடுகள் மீதும் உண்மையான நம்பிக்கை வைத்து, தொந்தரவு செய்தவர்களுக்கு பாடம் புகட்டும் விதமாக மாபெரும் வெற்றியை வழங்கிய புதுவை மாநிலம் மற்றும் தட்டாஞ்சாவடி தொகுதி மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது சார்பிலும், அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் சார்பிலும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வைத்திலிங்கம் வெற்றிக்காக உழைத்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள், அனைத்து பிரிவு தலைவர்கள், தொண்டர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழகத்தில் மகத்தான வெற்றியை பெற்ற தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்திய அளவில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கும், நரேந்திர மோடி மீண்டும் பிரதமராவதற்கு மக்கள் வழங்கிய தீர்ப்பிற்கு தலைவணங்கி வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அந்த வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மீது நம்பிக்கை வைத்து புதுவை நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் போட்டியிட்ட வைத்திலிங்கம், தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வெங்கடேசன் ஆகியோரை வெற்றி பெறச் செய்த புதுவை வாக்காளர்கள் அனைவருக்கும் காங்கிரஸ் கட்சி சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 

வெற்றிக்காக பாடுபட்ட காங்கிரஸ் கட்சி மாநில நிர்வாகிகள், கூட்டணி கட்சி தலைவர்கள் தொண்டர்கள் அனைவருக்கும் நெஞ்சார நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இனி வரும் காலங்களில் காங்கிரஸ் கட்சி வளர்ச்சிக்காக கண் துஞ்சாது பாடுபடும் ஏற்றமிகு தலைவர் ராகுல்காந்தியின் ஆணைப்படி லட்சிய பாதையில் பயணித்து என்றென்றும் தாய் திருநாட்டின் வளர்ச்சிக்காக அயராது பாடுபட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்