Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்ய முடியாது : ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா

மே 24, 2019 08:06

பெங்களூரு: பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதை நேரில் ஆய்வு செய்து அம்பலப்படுத்தியவர் ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா. இதன் மூலம் அவர் கர்நாடகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பிரபலம் அடைந்தார்.

அதன் பிறகு அவர் சிறைத்துறையில் இருந்து வேறு துறைக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டார். அவர் தற்போது ரெயில்வேத்துறை ஐ.ஜி.யாக பணியாற்றி வருகிறார்.

தற்போது நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்டு உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்யப்படுவதாக எதிர்க்கட்சிகள் புகார் கூறி வருகின்றன. இதுபற்றி நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்ய முடியாது என்று ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்ய முடியாது. அதற்கான சாத்தியமே இல்லை. இது அனைத்து ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கும் தெரியும். நான் எந்த கட்சிக்கு ஆதரவாகவும் இந்த கருத்தை கூறவில்லை.

உண்மை நிலையை கூறுகிறேன். தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து அதிகாரிகளும் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்பட மாட்டார்கள். இது எனது கருத்து. இதில் அரசியலுக்கு இடமில்லை. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

தலைப்புச்செய்திகள்