Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாடாளுமன்றத்தில் தூத்துக்குடி மக்களின் குரலாக ஒலிப்பேன்: கனிமொழி

மே 25, 2019 06:08

சென்னை: தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர் கனிமொழி, தனது தாயார் ராஜாத்தி அம்மாள் மற்றும் கணவர் அரவிந்தனுடன் நேற்று காலை கருணாநிதி நினைவிடத்தில் வெற்றி சான்றிதழை வைத்து ஆசி பெற்றார். அப்போது கனிமொழி நிருபர்களிடம் கூறியதாவது.

கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் கருணாநிதியின்
நினைவுகளை மனதில் தாங்கி கொண்டு, தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் நான்
பெற்றிருக்கும் வெற்றியை அவரது காலடியில் சமர்ப்பிக்க வந்துள்ளேன். எனக்கு இந்த
வாய்ப்பு கொடுத்த தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கும், தி.மு.க. நிர்வாகிகளுக்கும்,
கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

என் மீது நம்பிக்கை வைத்து என்னை வெற்றிபெற செய்த தூத்துக்குடி
வாக்காளர்களுக்கும் எனது நன்றியை தெரிவிக்கிறேன். தொடர்ந்து நாடாளுமன்றத்திலும்
அவர்களது குரலாக ஒலிப்பேன். அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற அத்தனை
முயற்சிகளையும் முன்வைப்பேன். தமிழகம் மற்றும் கேரளா மக்கள் மாற்று சிந்தனை
உள்ளவர்கள் என நிரூபித்து விட்டார்கள். தமிழகத்தில் திராவிட இயக்கத்தின் உழைப்பு
இன்னும் உயிரோடு இருக்கிறது என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர்
டி.ஆர்.பாலு, காஞ்சீபுரம் வேட்பாளர் ஜி.செல்வம், மயிலாடுதுறை வேட்பாளர் ராமலிங்கம்,
தென் சென்னை வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன், தமிழக சட்டமன்ற
இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திருவாரூர் வேட்பாளர் பூண்டி கலைவாணன்,
திருப்போரூர் வேட்பாளர் இதயவர்மன் உள்ளிட்டோரும் தங்களது சான்றிதழ்களை
கருணாநிதி நினைவிடத்தில் வைத்து ஆசி பெற்றனர்.

மேலும் கனிமொழி எம்.பி. அண்ணா அறிவாலயத்தில் தன்னுடைய வெற்றி சான்றிதழை
மு.க.ஸ்டாலினிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார். 
 

தலைப்புச்செய்திகள்