Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாடாளுமன்ற மக்களவை தேர்ததையொட்டி மாநிலம் வாரியாக 7 வகை கமிட்டி அமைப்பு

பிப்ரவரி 12, 2019 02:34

புதுடெல்லி: நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலம் வாரியாக 7 வகை கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. ஆந்திரா உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கும் தேர்தல் குழு அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பு குழு தலைவராக தமிழகத்துக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், புதுச்சேரிக்கு நாராயணசாமி நியமிக்கப்பட்டுள்ளனர். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி இருந்த நிலையில், கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் காங்கிரஸ் தலைவர் பதவியை அவரது மகன் ராகுல் காந்தி ஏற்றார்.  

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர்கள் மற்றும் பொதுச் செயலாளர்களின் இரண்டு நாள் கூட்டம் கடந்த 9ம் தேதி டெல்லியில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் முதன்முதலாகப் பிரியங்கா காந்தி பங்கேற்றார். நேற்று உத்தரபிரதேசத்தில் முதன்முறையாகக் கட்சி சார்பில் நடந்த பேரணியில் பிரியங்கா பங்கேற்றார்.  முன்னதாக, கடந்த சில நாட்களுக்கு முன், நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களுக்கும் தேர்தல் கமிட்டி அமைக்கப்பட்டு, ஒவ்வொரு மாநிலமாக அதன் நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. இதுகுறித்து, மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கூறியதாவது: மாநில அளவில் கூட்டணி அமைப்பது குறித்தும், அதற்காகத் தேர்தல் குழு அமைப்பது குறித்தும் மாநிலம் வாரியாக பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அந்தந்த மாநில காங்கிரஸ் தலைவர் தலைமையில் 7 விதமான தேர்தல் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாநில தேர்தல் கமிட்டியில், அம்மாநில தலைவர் தலைமையில், தேசிய செயலாளர், மாநில பொதுச்செயலாளர் சேர்த்து அதிகப்பட்சமாக 28 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. 

அதேபோல், ஒருங்கிணைப்பு கமிட்டியில் 36 பேர், பிரசார கமிட்டியில் 43 பேர், ஊடக கமிட்டியில் 15 பேர், நிர்வாக கமிட்டியில் 9 பேர், தேர்தல் அறிக்கை தயாரிப்பு கமிட்டியில் 22 பேர், விளம்பர கமிட்டியில் 27 பேரும் மாநில நிர்வாகிகள் அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர். மேற்கண்ட கமிட்டியில், ஒவ்வொரு கமிட்டிக்கும் தலைவர் மற்றும் துணை தலைவர் இருப்பார். அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் அந்தந்த கமிட்டி நிர்வாகிகள் செயல்பட வேண்டும்.  

அந்த வரிசையில் பஞ்சாப், கோவா, குஜராத், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட மாநிலங்களுக்கு கமிட்டி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், மக்களவை தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாச்சலபிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கும் சட்டசபை தேர்தல் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. மாநில தேர்தல் கமிட்டியின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் செயல்படுவார். அதேபோல், புதுச்சேரியில் அம்மாநில முதல்வர் நாராயணசாமி, மாநில தேர்தல் கமிட்டியின் ஒருங்கிணைப்புக் குழு தலைவராக இருப்பார். மாநில தலைவர் நமச்சிவாயம், பிரதேச தேர்தல் கமிட்டி தலைவராக இருப்பார். இவர்களின் கீழ் மற்ற கமிட்டிகள் செயல்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தலைப்புச்செய்திகள்