Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அடுத்த மாதம் மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தல்: வைகோ, அன்புமணி எம்.பி. ஆகிறார்கள்

மே 27, 2019 05:44

சென்னை: நாடு முழுவதும் உள்ள மாநிலங்களின் பரப்பளவு, மக்கள்தொகை அடிப்படையில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. அந்த வகையில், தமிழ்நாட்டிற்கு 18 இடங்கள் உள்ளன. ஒரு மாநிலங்களவை இடத்தை இடத்தை பெற 34 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை பெற வேண்டும்.

சட்டமன்ற தேர்தலில் அரசியல் கட்சிகளின் பலத்தின் அடிப்படையிலேயே மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான இடங்கள் கிடைக்கும். ஒரு மாநிலங்களவை எம்.பி.யின் பதவி காலம் 6 ஆண்டுகள் ஆகும். இவை சுழற்சி முறையில் காலியாகும். இந்த நிலையில், தமிழகத்தை சேர்ந்த 6 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவி காலம் ஜூலை 24-ந் தேதியுடன் முடிவடைகிறது.

அடுத்த மாதம் தேர்தல்

அதாவது, அ.தி.மு.க.வை சேர்ந்த வி.மைத்ரேயன், கே.ஆர்.அர்ஜூனன், டி.ரத்னவேல், ஆர்.லட்சுமணன், தி.மு.க.வை சேர்ந்த கனிமொழி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த டி.ராஜா ஆகியோரது பதவி காலம் நிறைவடைகிறது. புதிய மாநிலங்களவை எம்.பி.க்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் (ஜூன்) நடக்க இருக்கிறது.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் நடத்தப்பட்ட 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தி.மு.க. 13 இடங்களையும், அ.தி.மு.க. 9 இடங்களையும் கைப்பற்றியது. அ.தி.மு.க.வின் எம்.எல்.ஏ.க்களின் பலம் குறைந்துள்ளதால், ஒரு மாநிலங்களவை எம்.பி. இடத்தை அக்கட்சி இழக்கிறது. அந்த ஒரு இடம் தி.மு.க.வுக்கு கூடுதலாக கிடைக்கிறது.

அன்புமணி ராமதாஸ்

234 தொகுதிகள் கொண்ட தமிழக சட்டசபையில் அ.தி.மு.க.வின் பலம் 123 ஆகவும், தி.மு.க.வின் பலம் 110 ஆகவும் உள்ளது. இதன் அடிப்படையில், மாநிலங்களவையில் அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு தலா 3 இடங்கள் கிடைக்கும். ஒரு மாநிலங்களவை உறுப்பினருக்கு 34 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. இதை வைத்து பார்க்கும்போது அ.தி.மு.க.வில் 3 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு 102 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவையாக உள்ளது. மீதம் 21 எம்.எல்.ஏ.க்கள் உபரியாக இருக்கின்றனர்.

நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பா.ம.க. கூட்டணி அமைத்தபோது ஒரு மாநிலங்களவை இடம் வழங்கப்படுவதாக உறுதி அளிக்கப்பட்டது. அதன்படி, பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மாநிலங்களவை எம்.பி.யாகிறார். ஏற்கனவே இவர் 2004-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை மாநிலங்களவை எம்.பி.யாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வைகோ

110 எம்.எல்.ஏ.க்கள் பலம் கொண்ட தி.மு.க.வை பொறுத்தவரை, 3 மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்ட பிறகும் 8 எம்.எல்.ஏ.க்கள் உபரியாக இருக்கிறார்கள். நாடாளுமன்ற தேர்தல் கூட்டணியின்போது ம.தி.மு.க.வுக்கு ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்கித் தருவதாக தி.மு.க. வாக்குறுதி அளித்திருந்தது. அதன் அடிப்படையில், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்படுகிறார்.

அ.தி.மு.க.வில் இருந்து தேர்வு செய்யப்பட இருக்கும் 2 மாநிலங்களவை எம்.பி.க்கள் யார்? என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் நிலவி வருகிறது. தற்போது, எம்.பி.யாக உள்ள மைத்ரேயன் மீண்டும் வாய்ப்பு கேட்பதாக தெரிகிறது. அதேபோல், நாடாளுமன்ற முன்னாள் துணை சபாநாயகரும், கரூர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த தம்பிதுரையும் மாநிலங்களவை எம்.பி. வாய்ப்பு கேட்பதாக கூறப்படுகிறது. எனவே, கட்சித் தலைமை விரைவில் அதுகுறித்து முடிவு செய்யும்.

தி.மு.க.வை பொறுத்தவரை அக்கட்சிக்கு உள்ள ஒரு இடத்தை அகில இந்திய காங்கிரஸ் தலைமை மன்மோகன்சிங்குக்காக கேட்பதாக கூறப்படுகிறது. அவ்வாறு கொடுக்கும் பட்சத்தில், மீதம் ஒரு இடம் மட்டுமே தி.மு.க.வுக்கு இருக்கும். அதை யாருக்கு கொடுக்க வேண்டும் என்பதை தி.மு.க. தலைமை முடிவு செய்து விரைவில் அறிவிக்க இருக்கின்றது.
 

தலைப்புச்செய்திகள்