Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

9 முறை போட்டியிட்டு சாதனை: தஞ்சாவூர் தொகுதியில் 6 முறை வெற்றி பெற்ற பழனிமாணிக்கம்

மே 27, 2019 05:54

சென்னை: கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க. 37 இடங்களையும், பா.ஜ.க., பா.ம.க. தலா ஒரு இடத்தையும் கைப்பற்றியது. ஆனால், இந்த தேர்தலில் நிலைமை தலைகீழாக மாறியது. தி.மு.க. கூட்டணி 37 இடங்களையும், அ.தி.மு.க. ஒரு இடத்தையும் கைப்பற்றியுள்ளது.

தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களில் 5 பேர் முன்னாள் மத்திய மந்திரிகள். தயாநிதிமாறன் (மத்திய சென்னை தொகுதி), டி.ஆர்.பாலு (ஸ்ரீபெரும்புதூர்), எஸ்.ஜெகத்ரட்சகன் (அரக்கோணம்), ஆ.ராசா (நீலகிரி), எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் (தஞ்சாவூர்) ஆகியோர் ஏற்கனவே மத்திய மந்திரிகளாக இருந்துள்ளனர். திருச்சி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சு.திருநாவுக்கரசரும் ஏற்கனவே மத்திய மந்திரியாக இருந்துள்ளார்.

அதிக முறை போட்டி

நாடாளுமன்ற தேர்தலில் அதிக முறை போட்டியிட்டவர் என்ற பெருமையை தஞ்சாவூர் தொகுதி எம்.பி. எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் பெற்றுள்ளார். இவர் தஞ்சாவூர் தொகுதியில் 1984-ம் ஆண்டு முதல்முறையாக தி.மு.க. சார்பில் வேட்பாளராக களம் இறக்கப்பட்டார். முதல் தேர்தலில் அவர் தோல்வியையே சந்தித்தார். அதன்பின்னர் 1989, 1991-ம் ஆண்டு தேர்தல்களிலும் அவர் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

1996-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் முதல் முறையாக வெற்றி பெற்று எம்.பி. ஆனார். தொடர்ந்து 1998, 1999, 2004, 2009-ம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களிலும் போட்டியிட்டு தொடர் வெற்றிகளை பெற்றார். 2004-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை மத்திய நிதித்துறை இணை மந்திரியாக இருந்தார். தொடர்ந்து 5 முறை வெற்றி பெற்ற இவருக்கு 2014-ம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவருக்கு பதிலாக களம் இறக்கப்பட்ட டி.ஆர்.பாலு தோல்வி அடைந்தார்.

6 முறை வெற்றி

இந்த நிலையில், 9-வது முறையாக இந்தத் தேர்தலில் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் களம் இறக்கப்பட்டார். தமிழகத்தில் முக்கிய கட்சிகளை சேர்ந்த யாரும் இதுவரை 9 முறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டது இல்லை. இந்த தேர்தலில் பழனிமாணிக்கம் தன்னை எதிர்த்து போட்டியிட்ட த.மா.கா. வேட்பாளர் நடராஜனை 3 லட்சத்து 68 ஆயிரத்து 129 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 6-வது முறையாக எம்.பி. ஆகிறார்.

ஒரே தொகுதியில் 9 முறை போட்டியிட்டு, அதில் 6 முறை வெற்றி பெற்றவர் இவர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
 

தலைப்புச்செய்திகள்