Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க 8 நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு

மே 28, 2019 05:31

புதுடெல்லி: நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் நரேந்திர மோடி தொடர்ந்து 2-வது முறையாக பிரதமராக பதவியேற்கிறார். இந்த பதவியேற்பு விழா வருகிற 30-ந்தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது.

டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் இந்த விழாவில் பிரதமர் மோடிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். அவரை தொடர்ந்து பல்வேறு மந்திரிகளும் பதவியேற்பார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க 8 நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக இந்தியாவுடன் பிம்ஸ்டெக் (பல்துறை தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா திட்டம்) அமைப்பில் உறுப்பினராக உள்ள நாடுகளின் தலைவர்களுக்கு முறைப்படி அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது.

அதன்படி வங்காளதேசம், மியான்மர், இலங்கை, தாய்லாந்து, நேபாளம், பூடான் ஆகிய நாடுகளின் தலைவர்கள் இந்த அழைப்பை பெற்று உள்ளனர்.

இவர்களை தவிர ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர் பதவியை வகிக்கும் கிர்கிஸ்தான் நாட்டு அதிபர் சூரோன்பே ஜீன்பெகோவ் மற்றும் மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜெகநாத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

மத்திய அரசின் ‘அண்டை நாடுகளுக்கு முதலிடம்’ என்ற கொள்கையின் அடிப்படையில், பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவுக்கு பிம்ஸ்டெக் நாட்டு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளதாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் கூறினார்.

பிரதமர் மோடி கடந்த 2014-ம் ஆண்டு பதவியேற்ற போது, அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் உள்பட சார்க் நாட்டு தலைவர்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்