Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மகளின் திருமணத்தில் திடீரென இறந்த போலீஸ் அதிகாரி: இசை கச்சேரியில் பாடும்போது மயங்கி விழுந்தார்

மே 28, 2019 05:33

கொல்லம்: கேரளாவின் கொல்லம் மாவட்டத்துக்கு உட்பட்ட நீண்டகரா பகுதியை சேர்ந்தவர் விஷ்ணுபிரசாத். திருவனந்தபுரம் கரமனா போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த இவருக்கு சுஷ்மா என்ற மனைவியும், அனுபிரசாத், ஆர்யபிரசாத் என்ற மகன்களும், ஆர்ச்சா என்ற மகளும் உள்ளனர்.

பணி ஓய்வு பெறுவதற்கு இன்னும் ஓராண்டே இருந்ததால் அதற்கு முன் தனது ஒரே மகளான ஆர்ச்சாவுக்கு திருமணம் செய்து வைக்க விஷ்ணுபிரசாத் முடிவு செய்தார். இதற்காக கடக்கல் பகுதியை சேர்ந்த விஷ்ணுபிரசாத் என்பவரை மணமகனாக தேர்வு செய்து நிச்சயதார்த்தம் நடந்தது. பின்னர் திருமணத்தை பரிமனம் பகுதியில் உள்ள துர்காதேவி கோவிலில் நேற்று முன்தினம் நடத்துவது என முடிவு செய்தனர்.

இந்த திருமணத்துக்காக இரு வீட்டிலும் ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வந்தன. ஒரே மகள் என்பதால் ஆர்ச்சாவின் திருமணத்தை மிகவும் ஆடம்பரமாக நடத்த விரும்பிய விஷ்ணுபிரசாத், இதற்காக தனது வீட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தார். குறிப்பாக திருமணத்துக்கு முந்தைய நாள் (சனிக்கிழமை) இரவில் அவரது வீட்டில் இசைக்கச்சேரியும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந்த திருமணத்தில் பங்கேற்பதற்காக விஷ்ணுபிரசாத்தின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அவருடன் பணியாற்றும் போலீசாரின் குடும்பத்தினர் என ஏராளமானோர் அவரது வீட்டுக்கு வந்திருந்தனர். இசைக்கச்சேரி நடந்து கொண்டிருந்தபோது விஷ்ணுபிரசாத்தையும் அதில் பங்கேற்று பாடுமாறு உறவினர்கள் கேட்டுக்கொண்டனர்.

இதைத்தொடர்ந்து அவரும் மேடையேறி பாடல் பாடினார். இதில் மம்முட்டி நடித்த பிரபல சினிமாவான ‘அமரம்’ படத்தில், வயதான தந்தை தனது மகளின் மீதான அன்பை வெளிப்படுத்தும் வகையில் எழுதப்பட்டு இருந்த பாடலாகிய ‘ராக்கிளி பொன்மகளே...’ என்ற பாடலை அவர் பாடினார்.

இந்த பாடலை பாடிக்கொண்டிருந்தபோது திடீரென அவர் மேடையிலேயே மயங்கி சரிந்தார். இதனால் பதறிப்போன உறவினர்கள் உடனே மேடையேறி அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், விஷ்ணுபிரசாத் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவர் மாரடைப்பால் உயிரிழந்திருக்கலாம் என தெரிகிறது.

இந்த சம்பவம் எதையும் அறியாத மணப்பெண் ஆர்ச்சா, புதிய நகைகள், உடைகள் அணிந்து தனது தோழிகளுடன் மகிழ்ச்சியுடன் அரட்டையடித்துக்கொண்டு இருந்தார். அவரது மகிழ்ச்சியை குலைக்க விரும்பாத உறவினர்கள், அவரிடம் தந்தை இறந்த சம்பவம் குறித்து கூறவில்லை. அவரை பார்க்கும் அனைவரும் போலி சிரிப்பைக்காட்டி கடந்து சென்றனர்.

எனினும் ஆர்ச்சா தனது தந்தையை காணவில்லையே என பலமுறை உறவினர்களிடம் விசாரித்தார். ஆனால் பல்வேறு போலி காரணங்களை கூறி அவரை சமாதானப்படுத்தினர். ஆனால் விஷ்ணுபிரசாத்தோ மருத்துவமனையின் பிணவறையில் உயிரற்ற சடலமாக இருந்தார்.

பின்னர் திருமண நாளாகிய நேற்று முன்தினம் உறவினர்கள் அனைவரும் மணமக்களை கோவிலுக்கு அழைத்து சென்று முறைப்படி திருமணத்தை நடத்தி வைத்தனர். ஆர்ச்சாவின் கழுத்தில் தாலி கட்டிய மணமகன் விஷ்ணுபிரசாத், அவரை தனது இல்லத்துக்கு அழைத்து சென்றார். கணவர் வீட்டுக்கு செல்லும் போது பிரியாவிடை பெறுவதற்கும் தனது தந்தையை காணாத ஆர்ச்சா மிகுந்த சோகத்துடன் மணமகனுடன் சென்றார்.

அதைத்தொடர்ந்தே தந்தையின் இறப்பு குறித்து ஆர்ச்சாவிடம் தெரிவிக்கப்பட்டது. உடனே தனது கணவருடன் அலறியடித்துக்கொண்டு தந்தை வீட்டுக்கு வந்தார். பின்னர் நேற்று நடந்த இறுதிச்சடங்கில் அவர் கண்ணீர் மல்க பங்கேற்றார். இது பார்ப்போரின் கண்களை குளமாக்கியது.

தனது ஒரே மகளின் திருமணத்தை பார்க்க முடியாமல் விஷ்ணுபிரசாத் இறந்து போனது கேரளாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
 

தலைப்புச்செய்திகள்