Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 13 பேர் பதவி ஏற்புசபாநாயகர் முன்னிலையில் உறுதிமொழி

மே 29, 2019 05:45

சென்னை: தமிழகத்தில் காலியாக இருந்த 22 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. அதில் 13 தொகுதிகளில் தி.மு.க. வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற வேட்பாளர்கள் 13 பேரும் எம்.எல்.ஏ.யாக பதவி ஏற்கும் நிகழ்ச்சி நேற்று காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள சபாநாயகர் அறையில் நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு தி.மு.க. தலைவர் மற்றும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், தி.மு.க. கொறடா சக்கரபாணி, துணைக் கொறடா பிச்சாண்டி, டி.ஆர்.பாலு எம்.பி., காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, எம்.எல்.ஏ.க்கள் பொன்முடி, எ.வ.வேலு, நேரு, பெரிய கருப்பன், சேகர்பாபு உள்பட பலர் வந்திருந்தனர்.

மு.க.ஸ்டாலினை சபாநாயகர் கை குலுக்கி வரவேற்றார். சபாநாயகர் இருக்கைக்கு இடது பக்கத்தில் போடப்பட்டிருந்த இருக்கையில் மு.க.ஸ்டாலின் அமர்ந்தார். அவர் அருகே டி.ஆர்.பாலு அமர்ந்தார்.

சட்டசபை செயலாளர் சீனிவாசன் 13 பேரின் பெயரையும் வரிசையாகப் படித்தார். இதயவர்மன் (திருப்போரூர்), காத்தவராயன் (குடியாத்தம்), கிருஷ்ணசாமி (பூந்தமல்லி), சண்முகையா (ஓட்டப்பிடாரம்), சத்யா (ஓசூர்), சரவணக்குமார் (பெரியகுளம்), டாக்டர் சரவணன் (திருப்பரங்குன்றம்), செந்தில்பாலாஜி (அரவக்குறிச்சி), சேகர் (பெரம்பூர்), நீலமேகம் (தஞ்சாவூர்), பூண்டி கலைவாணன் (திருவாரூர்), மகாராஜன் (ஆண்டிப்பட்டி), வில்வநாதன் (ஆம்பூர்) ஆகியோர் ஒவ்வொருவராக வந்து உறுதிமொழி படித்து எம்.எல்.ஏ.யாக பதவி ஏற்றுக்கொண்டனர்.

உறுதிமொழியின் முதல் வார்த்தையை சபாநாயகர் ப.தனபால் உச்சரித்ததும், அவர்கள் மீதமுள்ள வரிகளை தொடர்ந்து படித்தனர். அப்போது, ‘ஆண்டவன் அறிய உறுதி அளிக்கிறேன்’ என்ற வார்த்தையை அவர்கள் தவிர்த்துவிட்டு ‘உளமாற உறுதி அளிக்கிறேன்’ என்று வாசித்தனர்.

உறுதிமொழியை படித்து முடித்ததும் அவர்களுக்கு சபாநாயகர் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். அதன் பின்னர் அவர்களை மு.க.ஸ்டாலினும் கைகுலுக்கி வாழ்த்தினார். பின்னர் பதிவேட்டில் 2 இடங்களில் ஒவ்வொருவரும் கையெழுத்திட்டனர். அதில் சபாநாயகர் ப.தனபாலும் கையெழுத்திட்டார்.

சுமார் அரை மணி நேரம் இந்த நிகழ்ச்சி நடந்தது. பின்னர் நிருபர்களுக்கு மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- தற்போது 101 சட்டப்பேரவை உறுப்பினர்கள் கொண்ட எதிர்க்கட்சியாக தி.மு.க. இருக்கிறது. இதன்பிறகு உங்களின் செயல்பாடு சட்டப்பேரவையில் எந்த மாதிரி இருக்கும்?.

பதில்:- சட்டமன்றம் கூடுகின்ற போது நாங்கள் எப்படி செயல்படுகின்றோம் என்பதை நீங்கள் நேரடியாக பார்க்கப் போகின்றீர்கள். அதைத்தான் நீங்கள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பவும் போகின்றீர்கள்.

கேள்வி:- சபாநாயகர் மீது தி.மு.க. நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தது. அந்த நம்பிக்கையில்லாத தீர்மானம், சபாநாயகர் மீது எடுத்துக்கொள்ளப்படுவதற்கு மீண்டும் உறுதியாக இருக்கின்றீர்களா?.

பதில்:- பொறுத்திருந்து பாருங்கள். திரையில் காட்சிகள் வரும்.

கேள்வி:- நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய அரசிற்கு எதிரான தீர்மானமான, நம்பிக்கை வாக்கெடுப்பை தி.மு.க. முன்னெடுக்குமா?.

பதில்:- சட்டமன்றம் கூடும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. அறிவித்ததற்குப் பிறகு அதுகுறித்து நாங்கள் முடிவெடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.


 


 

தலைப்புச்செய்திகள்