Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மோடிக்கு இங்கு மட்டும் எதிர்ப்பு அலை: ரஜினி காந்த் பரபரப்பு பேட்டி

மே 29, 2019 05:56


சென்னை: சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி: பா.ஜ.க. 303 தொகுதிகளில் வெற்றி பெற்றதை எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்: நாடாளுமன்ற தேர்தலில் மோடி என்கிற தனி மனித தலைமைக்கு கிடைத்த வெற்றி. அவர் மக்களை கவர்ந்திழுக்கும் தலைவர். இந்திய அரசியலில் மத்தியிலோ அல்லது மாநிலத்திலோ ஒரு தலைவனை வைத்து தான் அந்த கட்சியின் வெற்றி தீர்மானிக்கப்படுகிறது. 

இந்தியாவில் நேருவுக்கு பிறகு, இந்திரா காந்தி, ராஜீவ்காந்தி, வாஜ்பாய் உள்ளிட்ட தலைவர்கள் மக்களை கவர்ந்திழுப்பவர்களாக இருந்துள்ளனர். அந்த வகையில் தற்போது மோடி கிடைத்துள்ளார். தமிழகத்திலும் காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்டோர் மக்களை கவர்ந்திழுக்கும் தலைவர்களாக திகழ்ந்தனர். இதை பார்க்கும்போது இந்த வெற்றி மோடி தலைமைக்கு கிடைத்த வெற்றி.

கேள்வி: கோதாவரி-காவிரி இணைப்பதே எனது முதல் வேலை என்று மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறியுள்ளார். நீங்கள் நீண்ட நாள் வலியுறுத்திய நதி நீர் இணைப்பு சாத்தியமாகுமா?

பதில்: நதி நீர் இணைப்பு திட்டத்தை நான் பாராட்டுகிறேன். தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணி தோல்வி அடைந்திருந்தாலும், மத்திய மந்திரி நிதின் கட்காரி கோதவரி-காவிரி இணைப்பை கொண்டு வருவோம் என்று கூறியது பாராட்டுக்குரியது.

கேள்வி: நீங்கள் தேர்தலில் தமிழகத்தின் தீர்ப்பை எவ்வாறு பார்க்கிறீர்கள்?

பதில்: இந்தியாவில் ஆந்திரா, கர்நாடக உள்ளிட்ட சில இடங்களை தவிர அனைத்து இடங்களிலும் மோடி அலை வீசி வருகிறது. தமிழகத்தில் மட்டும் மோடி எதிர்ப்பு அலை வீசுகிறது. ஒருமுறை அரசியலில் அலை வந்துவிட்டால் அந்த அலையை எதிர்த்து யாரும் நீந்த முடியாது. அந்த அலையோடு செல்பவர்கள் தான் வெற்றி பெற முடியும்.

கேள்வி: மோடி எதிர்ப்பு அலைக்கு காரணம் நீட், மீத்தேன், ஹைட்ரோ கார்பன், ஸ்டெர்லைட், பணமதிப்பு இழப்பு, ஜி.எஸ்.டி. உள்ளிட்டவை காரணமா?

பதில்: தமிழகத்தில் பா.ஜ.க. தோல்விக்கு நீட், மீத்தேன், ஹைட்ரோ கார்பன், ஸ்டெர்லைட் மற்றும் எதிர்கட்சியின் சூறாவளி பிரசாரம் உள்ளிட்டவையும் ஒரு காரணம்.

கேள்வி: வரும் 5 ஆண்டுகளில் மத்தியில் அமையும் பா.ஜ.க. ஆட்சி தமிழகத்துக்கு என்ன செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்?

பதில்: மத்தியில் அமையும் பா.ஜ.க. ஆட்சி தமிழகத்துக்கு நல்ல திட்டங்களை முன் வைத்துள்ளது. முதலாவதாக நதிகளை இணைக்கும் திட்டம். குறிப்பாக கோதாவரி, காவிரி, கிருஷ்ணா நதிகள் இணைப்பை அவர்கள் செயல்படுத்த வேண்டும்.

கேள்வி: நடிகர் கமல்ஹாசன் கட்சி போட்டியிட்ட முதல் தேர்தலில் 3-வது கட்சியாக உருவெடுத்துள்ளதே அதுகுறித்து உங்கள் கருத்து?

பதில்: நாடாளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்து, 14 மாதங்களில் தேர்தலில் போட்டியிட்டு 4 சதவீதம் வரை வாக்கு பெற்றது கணிசமான வாக்குதான். அவருக்கு என்னுடைய பாராட்டுகள்.

கேள்வி: நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்துள்ளது, தமிழக சட்டமன்ற தேர்தல் 2 ஆண்டுகளில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் நீங்கள் எப்போது கட்சி தொடங்க உள்ளர்கள்?

பதில்: இதுகுறித்து பலமுறை நான் தெரிவித்து விட்டேன்.

கேள்வி: ராகுல் காந்திக்கு தலைமை பண்பு இல்லை என்று நினைக்கிறீர்களா?

பதில்: இல்லை. ராகுல் காந்திக்கு தலைமை பண்பு உள்ளது. காங்கிரஸ் கட்சி ஒரு பழமையான கட்சி, மூத்த தலைவர்கள் பலர் உள்ளனர். இவ்வாறு உள்ள மூத்த தலைவர்களை ஒரு இளைஞர் கையாளுவது மிகவும் கடினம். எனது பார்வையில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலர் இந்த தேர்தலில் முழு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை, கடினமாக உழைக்கவில்லை.

கேள்வி: ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்வேன் என்று கூறுகிறார். அவருக்கு உங்கள் அறிவுரை என்ன?

பதில்: ராகுல் காந்தி தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்யக்கூடாது. தன்னால் செய்ய முடியும் என்பதை அவர் நிரூபித்து காட்ட வேண்டும். ஜனநாயக ஆட்சியில் ஆளும் கட்சியும் முக்கியம். அதே வேளையில் எதிர்க்கட்சியும் முக்கியம் தான். எதிர்க்கட்சியும் பலம் வாய்ந்ததாக இருக்க வேண்டும். தற்போது ஆளும் கட்சி பலமாக உள்ளது.

கேள்வி: பிரதமர் பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கு நீங்கள் செல்வீர்களா?

பதில்: ஆம், செல்வேன்.

கேள்வி: தமிழர்கள் மந்திரி சபையில் இடம் பெறவேண்டும் என வலியுறுத்துவீர்களா? அதற்கான வாய்ப்பு உள்ளதா?

பதில்: இது வெறும் பதவி ஏற்கும் நிகழ்ச்சி. இதில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவிப்பேன்.

தண்ணீர் பிரச்சினை

கேள்வி: மத்திய அரசு நீட், காவிரி உள்ளிட்ட பிரச்சினைகளில் முதலில் எதில் கவனம் செலுத்த வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்?

பதில்: முதலில் தண்ணீர் பிரச்சினையில் கவனம் செலுத்த வேண்டும்.

கேள்வி: சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என எண்ணுகிறீர்களா?

பதில்: ஆம்.

கேள்வி: வரும் 2021-ம் ஆண்டு அரசியலுக்கு வருவீர்களா?

பதில்: இதற்கு நான் பலமுறை பதில் கூறியுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்

தலைப்புச்செய்திகள்