Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

எம்.பி.பி.எஸ். படிப்புக்கு கூடுதலாக 350 இடங்கள் ஒதுக்கீடு இந்திய மருத்துவ கவுன்சில் ஒப்புதல்

மே 29, 2019 05:58

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 22 அரசு மருத்துவ கல்லூரிகளில் 2 ஆயிரத்து 900 எம்.பி.பி.எஸ். இடங்களும், ஐ.ஆர்.டி. பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரியில் 100 இடங்கள் என மொத்தம் 3 ஆயிரம் எம்.பி.பி.எஸ். இடங்கள் இருக்கின்றன. இதில் ஐ.ஆர்.டி. பெருந்துறை இடங்களை அரசின் கலந்தாய்வு மூலம் தனியாக நிரப்பப்படுகிறது.

இந்நிலையில் தற்போது கூடுதலாக எம்.பி.பி.எஸ். இடங்கள் கேட்டு தமிழக அரசு இந்திய மருத்துவ கவுன்சிலின் ஒப்புதலுக்கு அனுப்பியது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, தற்போது எம்.பி.பி.எஸ். படிப்புக்கான கூடுதல் இடங்களுக்கு இந்திய மருத்துவ கவுன்சில் ஒப்புதல் அளித்து இருக்கிறது.

மதுரை மற்றும் நெல்லை அரசு மருத்துவ கல்லூரிகளில் ஏற்கனவே 150 இடங்கள் இருக்கின்றன. இந்த 2 மருத்துவ கல்லூரிகளுக்கு கூடுதலாக தலா 100 இடங்களும், கரூரில் புதிதாக கட்டப்பட்டு இருக்கும் மருத்துவ கல்லூரிக்கு 150 இடங்களும் என மொத்தம் 350 எம்.பி.பி.எஸ். இடங்களை ஒதுக்கீடு செய்து இந்திய மருத்துவ கவுன்சில் ஒப்புதல் அளித்து இருக்கிறது.

நீட் தேர்வு முடிவு வெளியானதும், மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகும். அதை தொடர்ந்து கலந்தாய்வு நடத்தப்பட்டு, எம்.பி.பி.எஸ். இடங்கள் நிரப்பப்படும். கூடுதலாக ஒப்புதல் பெறப்பட்டு இருக்கும் இந்த 350 எம்.பி.பி.எஸ். படிப்புக்கான இடங்கள் இந்த கல்வி ஆண்டிலேயே கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தலைப்புச்செய்திகள்