Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோவை சரவணா செல்வரத்தினம் ஸ்டோருக்கு சீல் வைப்பு: ஐகோர்ட்டு

மே 30, 2019 05:59

கோவை: ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் கோவையில் சரவணா செல்வரத்தினம் ஸ்டோருக்கு அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர். அத்துடன் அங்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

சரவணா செல்வரத்தினம் ஸ்டோர்

கோவை ஒப்பணக்கார வீதியில் சரவணா செல்வரத்தினம் ஸ்டோர் என்ற அடுக்குமாடி வணிக வளாகம் உள்ளது. தரைத்தளம் மற்றும் 4 மாடிகளுடன் 2600 சதுர மீட்டர் பரப்பளவில் செயல்பட்டு வரும் இந்த வணிக வளாகத்தில் துணிகள், பாத்திரங்கள், விளையாட்டு பொருட்கள், நோட்டு புத்தகங்கள், வீட்டு உபயோக பொருட்கள் உள்பட பல்வேறு பொருட்கள் தனித் தனியாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இதை கட்டும்போது வாகன நிறுத்தும் வசதி, மற்றும் ஒவ்வொரு தளத்திலும் தனித்தனியாக திறந்தவெளி பகுதி வசதி செய்யப்படும் என்ற விதிமுறைகளின் அடிப்படையில் தான் அனுமதி வாங்கப்பட்டது.

விதிமுறை மீறல்

ஆனால் பார்க்கிங் வசதிக்காக விடப்பட்ட இடத்தை வணிக வளாக நிர்வாகத்தினர் குடோனாக பயன்படுத்தியதுடன், ஒவ்வொரு தளத்திலும் தனித்தனியாக திறந்தவெளி பகுதி வசதியை செய்யவில்லை.

இதனால் இந்த வணிக வளாகத்துக்கு செல்பவர்களுக்கு போதிய பாதுகாப்பு வசதி இல்லை என்றும் அங்கு விதிமுறை மீறல் இருப்பதால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க மாநகராட்சிக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

அதிகாரிகளுக்கு உத்தரவு

இந்த வணிக வளாகத்துக்கு அனுமதி கொடுத்தது உள்ளூர் திட்ட குழுமம் என்பதால் மாநகராட்சி நடவடிக்கை எடுக்க முடியாது என்று மாநகராட்சி தரப்பில் ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இங்கு விதிமுறை மீறல் இருப்பதால் மாநகராட்சி மற்றும் உள்ளூர் திட்டக்குழுமம் சேர்ந்து உடனடியாக சரவணா செல்வரத்தினம் ஸ்டோர் இருக்கும் வணிக வளாகத்தை பூட்டி சீல் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டது.

இதையடுத்து கோவை உள்ளூர் திட்டக்குழும உறுப்பினர் மற்றும் செயலாளர் சண்முகம், மாநகராட்சி அதிகாரிகள் நேற்று காலை அந்த வணிக வளாகத்துக்கு சென்றனர். பின்னர் அவர்கள் அங்கிருந்த ஊழியர்களிடம் விதிமுறையை மீறி வணிக வளாகம் கட்டப்பட்டு இருப்பதால் கோர்ட்டு உத்தரவின்படி சீல் வைக்க போகிறோம் என்று கூறினார்கள்.

சீல் வைப்பு

அதற்கு அங்கிருந்த ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் அதிகாரிகள் அந்த வணிக வளாகத்தின் ஷட்டர்களை மூடி அதற்கு சீல் வைத்தனர். அத்துடன் அந்த வணிக வளாகத்துக்குள் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது என்ற அறிவிப்பு நோட்டீசும் அங்கு ஒட்டப்பட்டது.

மேலும் போலீசார் அந்த கடைகள் முன்பு சாலை தடுப்பான்களை வைத்து யாரும் செல்லாதவாறு தடை ஏற்படுத்தி உள்ளனர்.
 

தலைப்புச்செய்திகள்