Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தாம்பரம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தியில் அ.தி.மு.க, தி.மு.க. மோதல்

மே 30, 2019 06:42

தாம்பரம்: சென்னையை அடுத்த தாம்பரம் தாலுகா அலுவலகத்தில் நேற்று காலை ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தாம்பரம் கோட்டாட்சியர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். இதில் தாம்பரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா கலந்துகொண்டு பேசினார்.

அப்போது காஞ்சீபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை தலைவரும், அ.தி.மு.க. நகர செயலாளருமான கூத்தன் தலைமையில் ஏராளமான அ.தி.மு.க.வினர் ஜமாபந்தி நடைபெறும் இடத்துக்கு வந்தனர்.

ஜமாபந்தியை ஏன் காலதாமதமாக ஆரம்பித்தீர்கள்? என கோட்டாட்சியரிடம் கேட்ட அ.தி.மு.க. நகர செயலாளர் கூத்தன், பின்னர் ஜமாபந்தி நடைபெற்ற மேடையில் அமர்ந்தார்.

அதற்கு தி.மு.க. எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா எதிர்ப்பு தெரிவித்தார். மக்கள் பிரதிநிதிகள்தான் மேடையில் அமரவேண்டும். எந்த அடிப்படையில் அ.தி.மு.க. நகர செயலாளரை மேடையில் அமர வைக்கீறீர்கள்? என கோட்டாட்சியர் ராஜ்குமாரை பார்த்து கேட்டார்.

இதற்கு அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அ.தி.மு.க- தி.மு.க.வினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி மோதலில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த போலீசார் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் திட்டிக்கொண்டு, நாற்காலிகள் மற்றும் செருப்புகளை வீசி கடும் ரகளையில் ஈடுபட்டனர்.

இதனால் ஜமாபந்தி நிகழ்ச்சியில் கோரிக்கை மனுக்கள் வழங்க வந்த பொதுமக்கள் அலறி அடித்தபடி ஓட்டம் பிடித்தனர். இரு தரப்பினருக்கும் மோதல் அதிகரித்ததால் பரங்கிமலை துணை கமிஷனர் முத்துசாமி, தாம்பரம் உதவி கமிஷனர் அசோகன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர்.

அப்போது தி.மு.க.வினரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் அவர்களுக்கு எதிராக கோஷமிட்டனர். பதிலுக்கு அ.தி.மு.க. மற்றும் வருவாய் துறையினரை கண்டித்து தி.மு.க.வினரும் கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இரு தரப்பினரிடமும் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி கொண்டு இருந்தனர்.

அப்போது மீண்டும் இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் நாற்காலிகள் மற்றும் செருப்புகளை தூக்கி வீசி தாக்கிக்கொண்டனர். இருதரப்பினரும் தூக்கி வீசிய நாற்காலிகள் இவர்களை சமாதானப்படுத்த முயன்ற பெண் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் மீது விழுந்தது.

இதையடுத்து கோட்டாச்சியர் ராஜ்குமார் மற்றும் அதிகாரிகள் ஜமாபந்தியை ரத்து செய்துவிட்டு தங்கள் அறைக்கு சென்றனர். ஆனால் ஜமாபந்தியை தொடர்ந்து நடத்தவேண்டும் என்று அந்த இடத்திலேயே தி.மு.க.வினர் திரண்டு இருந்தனர். அதன்பிறகு அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வினர் தாலுகா அலுவலகத்தில் இருந்து வெளியேறினர்.

இது தொடர்பாக தாம்பரம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா கூறியதாவது:-

ஜமாபந்தியில் மனு அளிக்க 300 பொதுமக்கள் வந்திருந்தனர். மோதலை காரணம் காட்டி கோட்டாட்சியர் ராஜ்குமார் ஜமாபந்தியை ரத்து செய்துள்ளார். தாம்பரம் தாலுகா அலுவலகத்தில் எந்தவொரு மக்கள் நலதிட்ட பணிகளும் நடைபெறுவது இல்லை.

மனுக்கள் வழங்கும் பொதுமக்களை அலைகழிக்கின்றனர். தரகர்களை வைத்துக்கொண்டு ஆளும் கட்சிக்கு ஆதரவாக பல்வேறு முறைகேடுகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் புகார் செய்யப்பட்டுள்ளது. மக்கள் பிரச்சினைகளில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

ஜமாபந்தி நடைபெற்ற இடத்தில் தமிழக முதல்-அமைச்சர் படம் இல்லை. மக்கள் பிரச்சினைகள் குறித்து மனுஅளிக்க எங்கள் கட்சியினரோடு ஜமாபந்தி நடைபெறும் இடத்துக்கு சென்றேன். அரசு பதவியில் இருப்பதால் கூட்டமேடையில் அமர்ந்தேன். நான் அமரக்கூடாது என எஸ்.ஆர். ராஜா எம்.எல்.ஏ. கூறி தகராறு செய்தார்.

தி.மு.க.வினர் தகாத வார்த்தைகளால் பேசி ரகளை செய்தனர். தி.மு.க.வினர் திட்டமிட்டே அராஜகத்தில் ஈடுபட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

தாம்பரம் தாலுகா அலுவலகத்தில் அ.தி.மு.க-தி.மு.க.வினர் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தலைப்புச்செய்திகள்