Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சமூக வலைதளங்களில் சாதி மோதலை உருவாக்க முயற்சி: நடவடிக்கை எடுக்குமாறு திமுக புகார்

மே 30, 2019 08:55

அரியலூர்: சமூக வலைதளங்களில் சாதி மோதலை உருவாக்கும் வகையில் பதிவிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரியலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அதில், “நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலை முன்வைத்து சிலர் இரண்டு சமுதாயத்தின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்தும் விதத்திலும், சாதிய மோதலை உருவாக்கும் நோக்கிலும் முகநூல், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அருவருக்கத்தக்க வகையில் பேசியும் எழுதியும் வருகின்றனர். 

மேலும், திமுக தலைமை குறித்தும், திமுக குறித்து அவதூறாகப் பதிவு செய்து வருகின்றனர். இதனால் மாவட்டத்தில் பொது அமைதிக்குப் பங்கம் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதுதொடர்பாக உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மாவட்ட, ஒன்றிய அளவில் அனைத்துக் கட்சி நிர்வாகிகளை அழைத்துப் பேசி சாதி மோதல் உருவாகாமல் தடுத்திட வேண்டும் என்றும், மோதல் உருவாவதற்குக் காரணமாக இருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனுவில் வலியுறுத்தியுள்ளனர். திமுக கொள்கைப் பரப்பு துணைச் செயலாளர் பெருநற்கிள்ளி மற்றும் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த திமுக ஒன்றியச் செயலாளர்கள் இந்தப் புகாரை அளித்துள்ளனர்.
 
இதுதொடர்பாக தா.பழூர் ஒன்றிய திமுக செயலாளர் க.சொ.க.கண்ணனிடம் பேசினோம்.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மீன்சுருட்டி அருகேயுள்ள முத்துச்சேர்வமடம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு நபர் வன்னியர் சமூகத்தினரைக் கடுமையாக திட்டி வீடியோ வெளியிட்டிருந்தார். அவர் தன்னை விசிக என்றும் கூறிக்கொள்கிறார். 

இதேபோல செந்துறையில் பாமகவைச் சேர்ந்த ஒருவர், பட்டியலினத்தவர்களுக்கு எதிராக வன்முறையாகப் பேசி வீடியோ பதிவிட்டிருக்கிறார். இதுபோல சமூக வலைதளங்கள் மூலம் சாதி மோதலை உருவாக்கும் நோக்கில் சிலர் பதிவிட்டு வருகின்றனர். இதுபோன்ற சிலரின் செய்கையால் மோதல் ஏற்பட்டு அது சாதிய பிரச்சினையாக உருவாகும் அபாயம் உள்ளது. அதைத் தடுக்கும் பொருட்டே புகார் அளித்தோம்” என்றார்.

மேலும், “திமுக தலைவர்களை இழிவாக விமர்சித்து தமிழகம் முழுவதிலும் இருந்து சமூக வலைதளங்களில் பலர் இழிவான கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்” என்றும் அவர் தெரிவித்தார்.
 
சமூக வலைதளங்களில் சாதிக் கலவரத்தை உண்டாக்கும் வகையில் அவதூறு பரப்பினால் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என அரியலூர் மாவட்ட எஸ்பி சீனிவாசன் எச்சரித்திருக்கிறார்.

தலைப்புச்செய்திகள்