Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கர்நாடகத்தில் 61 நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் அமைதியான வாக்குப்பதிவு

மே 30, 2019 01:17


பெங்களூரு: கர்நாடகத்தில் 61 நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் அமைதியான வாக்குப்பதிவு நடந்தது. பெங்களூருவில் பா.ஜனதா, ஜனதாதளம்(எஸ்) கட்சியினர் மோதிக் கொண்டதால் போலீசார் தடியடி நடத்தினார்கள்.

உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல்

கர்நாடகத்தில் 61 நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கு மே 29-ந் தேதி (அதாவது நேற்று) தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, 61 நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. 61 உள்ளாட்சி அமைப்புகளில் 8 நகர சபைகள், 32 புரசபைகள், 21 பட்டண பஞ்சாயத்துகளும் அடங்கும். இவற்றில் மொத்தமுள்ள 1,056 வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு 4,360 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இந்த தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது. இதற்காக 1,998 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. யாருக்கும் வாக்களிக்க விரும்பாத நோட்டா வசதியும் இந்த தேர்தலில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

அமைதியாக நடந்தது

காலை 7 மணியில் இருந்து விறுவிறுப்பாக ஓட்டுப்பதிவு நடைபெற்றது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஓட்டுப்போட்டு தங்களது ஜனநாயக கடமையாற்றினார்கள். ஒரு சில வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதானது. இதன் காரணமாக அங்கு ஓட்டுப்பதிவு நிறுத்தப்பட்டது. பின்னர் ஊழியர்கள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை உடனடியாக சரி செய்தனர். இதனால் அந்த வாக்குச்சாவடிகளில் மீண்டும் ஓட்டுப்பதிவு நடைபெற்றது.

தோ்தலையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இதனால் எந்த விதமான அசம்பாவிதங்களும் இன்றி அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் நாளை (வெள்ளிக்கிழமை) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

2 வார்டுகளுக்கு இடைத்தேர்தல்

இதுபோல, பெங்களூரு மாநகராட்சியில் காலியாக உள்ள சகாயபுரம் மற்றும் காவேரிபுரா ஆகிய வார்டுகளுக்கும் நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்த 2 வார்டுகளிலும் நேற்று காலையில் 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது. காலையில் விறுவிறுப்பாக நடந்த ஓட்டுப்பதிவு மதியம் மந்தமான முறையில் நடந்தது.

இதனால் 2 வார்டுகளிலும் குறைவான வாக்குகளே பதிவாகியது. அதன்படி, காவேரிபுரா வார்டு இடைத்தேர்தலில் 39.54 சதவீதமும், சகாயபுரம் வார்டில் 44.82 சதவீதம் வாக்குகளும் பதிவாகி இருந்தது. இந்த 2 வார்டுகளுக்கான ஓட்டு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது.

போலீஸ் தடியடி

இடைத்தேர்தலையொட்டி பெங்களூரு மாநகராட்சியின் 2 வார்டுகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. ஆனாலும் பாதுகாப்பையும் மீறி பா.ஜனதா மற்றும் ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் தொண்டர்கள் மோதிக் கொண்டனர். அதாவது காவேரிபுரா வார்டில் உள்ள பட்டேகாரபாளையா வாக்குச்சாவடி அருகே அந்த 2 கட்சிகளின் தொண்டர்களும் மோதிக் கொண்டனர்.

உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று தொண்டர்களை சமாதானப்படுத்த முயன்றனர். அப்போது அங்கு தள்ளுமுள்ளு உண்டானது. இதையடுத்து, நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர பா.ஜனதா, ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் தொண்டர்கள் மீது போலீசார் லேசான தடியடி நடத்தினார்கள். இதனால் அவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

தலைப்புச்செய்திகள்