Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மண்டியாவின் வளர்ச்சி மட்டுமே எனது நோக்கம்: நடிகை சுமலதா

மே 30, 2019 01:19


பெங்களூரு: மண்டியாவின் வளர்ச்சி மட்டுமே எனது நோக்கம் என்றும், பா.ஜனதாவில் சேருவது குறித்து மக்கள் தான் முடிவு எடுப்பார்கள் என்றும் சுயேச்சை எம்.பி. நடிகை சுமலதா தெரிவித்துள்ளார்.

அம்பரீஷ் பிறந்தநாள் விழா

கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்தவர் அம்பரீஷ். இவர், கடந்த ஆண்டு(2018) நவம்பர் மாதம் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். நடிகர் அம்பரீசுக்கு நேற்று பிறந்தநாள் ஆகும். இதையடுத்து, பெங்களூரு கன்டீரவா ஸ்டூடியோவில் உள்ள அம்பரீசின் சமாதியில், அவரது மனைவியும், சுயேச்சை எம்.பி.யான நடிகை சுமலதா, அவரது மகன் அபிஷேக் அம்பரீஷ் ஆகியோர் அஞ்சலி செலுத்தியதுடன், சிறப்பு பூஜை செய்து வழிபட்டார்கள். அப்போது அவர்களுடன் நடிகர் தர்ஷனும் உடன் இருந்தார்.

இதுபோல, நடிகர் அம்பரீசின் ஆயிரக்கணக்கான ரசிகர்கள், அவரது சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் சுமலதா எம்.பி. நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

வளர்ச்சி மட்டுமே நோக்கம்

அம்பரீஷ் பிறந்தநாளில், அவர் எங்களுடன் இல்லை என்பதால் மிகுந்த வேதனையாக இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றிருப்பதன் மூலம் மண்டியா மக்கள் எனக்கு மிகப்பெரிய பொறுப்பு வழங்கியுள்ளனர். மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து வெற்றி பெற செய்திருக்கிறார்கள்.

அவர்களது நம்பிக்கை வீண் போகாதபடி நடந்து கொள்வேன். மண்டியா மக்கள் மட்டுமே எனக்கு முக்கியம். மண்டியாவின் வளர்ச்சியே எனது நோக்கம். மக்களின் எண்ணங்கள் பூர்த்தி ஆகும்படி பணியாற்றுவேன்.

மக்கள் முடிவு எடுப்பார்கள்

மண்டியா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி மட்டுமே பெற்றுள்ளேன். இன்னும் எம்.பி.யாக பதவி கூட ஏற்கவில்லை. அதற்குள் என் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறுகிறார்கள். அதை பற்றி நான் கவலைப்பட போவதில்லை. மண்டியா மாவட்டத்தின் வளர்ச்சிக்காக அனைவருடனும் இணைந்து செயல்பட தயாராக உள்ளேன்.

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கட்சியினர், எனக்கு ஆதரவு தெரிவித்தனர். அதனால் அந்த கட்சியின் தலைவர்களை சந்தித்து நன்றி தெரிவித்தேன். நான் பா.ஜனதாவில் சேரப்போவதாக செய்திகள் வருகிறது. மண்டியா மக்களை கேட்காமல் எந்த முடிவும் எடுக்க மாட்டேன். பா.ஜனதாவில் சேருவது பற்றி மண்டியா மக்கள் தான் முடிவு எடுப்பார்கள். இவ்வாறு சுமலதா எம்.பி. கூறினார்.

தலைப்புச்செய்திகள்