Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புற்றுநோய் அதிகரிப்பு: புகையிலை ஒழிப்பு சட்டங்களை கடுமையாக்க வேண்டும் டாக்டர் வி.சாந்தா

மே 31, 2019 06:03

சென்னை: உலக புகையிலை எதிர்ப்பு தினம் இன்று (வெள்ளிக்கிழமை) அனுசரிக்கப்பட உள்ளது. இதையொட்டி சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் புகையிலை எதிர்ப்பு குறித்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதுகுறித்து அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் வி.சாந்தா நிருபர்களிடம் கூறியதாவது.

கடந்த 64 ஆண்டுகளாக புற்றுநோய் பற்றியும், அதை தடுப்பது பற்றியும் நாங்கள் பார்த்து வருகிறோம். புகையிலையை ஒழித்தால் 40 சதவீதம் புற்றுநோயை தடுக்க முடியும். புற்றுநோய் கட்டுப்படுத்தும் மையங்கள், அரசு சேர்ந்து இதை செய்ய வேண்டும். புற்றுநோய் பாதிப்பு அதிகமாகி கொண்டே வருகிறது.

அதிலும் குறிப்பாக நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. தமிழகம் அதில் முதல் இடத்தில் உள்ளது. ஆண்களை போலவே பெண்களுக்கும் இந்த பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்படும் 100 பேரில் 90 பேர் ஓராண்டிலேயே இறந்து விடுகிறார்கள்.

அரசு கடுமையாக்க வேண்டும்

புற்றுநோயை தடுக்க அரசு ஆதரவு தரவேண்டும். புகையிலையை ஒழிக்க போதுமான சட்டங்கள் உள்ளன. அந்த சட்டங்களை அரசு கடுமையாக்க வேண்டும். புகையிலையினால் புற்றுநோய் மட்டும் அல்ல. ஏராளமான நோய்கள் வரும்.

புகையிலைக்கு தடை விதித்து இருக்கிறார்கள். ஆனால் பல இடங்களில் புகையிலை பொருட்கள் கிடைக்கிறது. ஆல்கஹாலுக்கு எப்படி தனியாக கடை அமைத்து விற்பனை செய்கிறார்களோ? அதேபோல், புகையிலைக்கும் லைசென்ஸ் வழங்கி விற்பனை செய்ய அரசு சட்டம் கொண்டு வரவேண்டும்.

புற்றுநோய் பாதிப்பு அதிகரிக்கிறது

பள்ளிகளுக்கு அருகாமையில் இருக்கும் கடைகளில் புகையிலை விற்பனை செய்வதையும், புகையிலை நிறுவனங்கள் இருப்பதையும் தடை செய்ய வேண்டும். புகையிலையினால் உண்டாகும் நோய்கள் பற்றி வெளியே எடுத்து சொல்ல வேண்டும். பலருக்கு இதை பற்றி தெரிவதில்லை.

மெல்லும் புகையிலைகளுக்கு தடை உண்டு. ஆனால் விற்பனை செய்கிறார்கள். இதனால் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் புற்றுநோய் பாதிப்பு என்பது 4 சதவீதம் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தமிழகத்தில் புகையிலை உற்பத்தி கிடையாது. வடமாநிலங்களில் இருந்து தான் கொண்டு வரப்படுகிறது. அதிலும் குறிப்பாக கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு கொண்டு வருகிறார்கள். எல்லை தாண்டி அந்த புகையிலை எப்படி வருகிறது?. இவ்வாறு அவர் கூறினார்.

ஒரு நாள் விற்பனை இல்லை

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் நிருபர்களிடம் கூறுகையில், உலக புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி நாளை (இன்று) ஒரு நாள் மட்டும் புகையிலை சார்ந்த பொருட்களை வணிகர்கள் விற்பனை செய்ய மாட்டோம் என்று தெரிவித்து இருக்கிறோம். அனைத்து வணிகர்களும் இதை பின்பற்றுவார்கள் என நம்புகிறேன். பள்ளிக்கூடத்துக்கு அருகில் புகையிலை விற்பனை செய்வது தவறு. அப்படி விற்பனை செய்யும் வணிகர்கள் சங்கத்தில் உறுப்பினராக இருந்தால் அதில் இருந்து நீக்கப்படுவார்’ என்றார்.

இந்த பேட்டியின் போது அடையாறு புற்றுநோய் மருத்துவமனை துணை தலைவர் டாக்டர் இ.ஹேமந்த் ராஜ், இயக்குனர் டாக்டர் ஜி.செல்வ லட்சுமி, உதவி இயக்குனர் டாக்டர் ஆர்.சுவாமிநாதன், இணை பேராசிரியர் டாக்டர் வி.சுரேந்திரன், எம்.ஏ.சி.டி. நிர்வாக இயக்குனர் எஸ்.சிரில் அலெக்சாண்டர், இந்திய பல் மருத்துவ சங்கத்தின் (சென்னை கிளை) தலைவர் டாக்டர் எம்.எஸ்.சந்திரகுப்தா உள்பட பலர் உடன் இருந்தனர்.

மனித சங்கிலி

உலக புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி ‘புகையிலையும், நுரையீரல் நலமும்’ என்ற தலைப்பில் மைய கருத்தை வைத்து இருக்கின்றனர். அடையாறு புற்றுநோய் மருத்துவமனை சார்பில் ‘புகையிலைக்கு எதிராக ஒன்றாக நிற்போம்’ என்ற தலைப்பில் மனித சங்கிலி சென்னை பெசன்ட்நகர், எலியட்ஸ் கடற்கரையில் இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெற இருக்கிறது.

அதேபோல், ‘வாழ்க்கையை தேர்வு செய்யுங்கள், புகையிலை வேண்டாம்’ என்ற தலைப்பில் சென்னையில் பல்வேறு இடங்களில் காலை 7.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை வீதி நாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த இருக்கிறார்கள்.

தலைப்புச்செய்திகள்