Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உயர் அழுத்த மின்சாரத்தை பயன்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு திடீர் கட்டுப்பாடுகள்

மே 31, 2019 06:04

சென்னை: தமிழகம் தொழில் நகரங்கள் நிறைந்த மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது. இங்கு பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் லட்சக்கணக்கான பேர் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர்.

பெரும்பாலான தொழிற்சாலைகளும், தொழில் நிறுவனங்களும் உயர் அழுத்த மின்சார பயன்பாடு மூலம் 24 மணி நேரமும் இயங்கி வருகின்றன. குறிப்பாக காலை பத்திரிகைகள் அச்சிடும் பணி இரவு நேரத்தில் தான் நடக்கின்றன.

வாய்மொழி உத்தரவு

இந்தநிலையில் தமிழ்நாட்டில் பல இடங்களில் தொழிற்சாலைகளுக்கு மின்சார வாரிய கண்காணிப்பு பொறியாளர்கள் வாய்மொழி உத்தரவு ஒன்றை பிறப்பித்து வருகின்றனர்.

அதில், நாங்கள் கூறும் நாட்களில் 4 மணிக்கு மேல் உயர் அழுத்த மின்சாரத்தை தொழிற்சாலைகள் கட்டாயம் பயன்படுத்தக் கூடாது. மீறி பயன்படுத்தினால் கடுமையான அபராதம் விதிக்கப்படும்.

நாங்கள் அறிவுறுத்தாத நாட்களில் வேண்டும் என்றால் மாலை 4 மணிக்கு மேல் உயர் அழுத்த மின்சாரத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தாராள மனப்பான்மையுடன் கூறுவது போன்று தெரிவித்துள்ளனர்.

முதல்-அமைச்சருக்கு வேண்டுகோள்

தமிழ்நாட்டில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காக உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி, அதன் மூலம் தொழில் நிறுவனங்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொழில் வளர்ச்சியை பெருக்கும் அதே வேளையில் தற்போது விதிக்கப்படும் இத்தகைய கட்டுப்பாடுகள் தொழிற்சாலைகளை கடுமையாக பாதிக்கும்.

தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு என்ற செய்தி வெளியே தெரிந்தால் புதிதாக தொழில் தொடங்க நினைப்பவர்களை கண்டிப்பாக தயக்கம் அடைய செய்யும்.

எனவே இந்த விவகாரத்தில் முதல்-அமைச்சர், மின்சாரத்துறை அமைச்சர், மின்சார வாரியத் தலைவர் ஆகியோர் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழிற்சாலைகள் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்