Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கேரளாவில் இன்னும் 4 நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கும்

ஜுன் 02, 2019 07:04

திருவனந்தபுரம்: கேரளாவில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.

அதன்படி, கேரளாவில் மே மாதம் இறுதி வரை தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. இந்நிலையில் லட்சத்தீவு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்பட தொடங்கியது. இதன் மூலம் இன்னும் 4 நாட்களில், அதாவது வருகிற 6-ந்தேதி முதல் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை காலத்தில்தான் கேரளாவிற்கு அதிக மழை பொழிவு கிடைக்கும். இந்த ஆண்டு 97 சதவீதம் வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கேரளாவில் 97 சதவீதம் மழை பெய்யும் என்று எதிர்பார்ப்பதாக கூறிய அதிகாரிகள் அது 8 சதவீதம் வரை கூடவோ அல்லது குறையவோ வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கினால் மேற்கு தொடர்ச்சி மலையில் மழை பெய்யும். இதனால் தமிழகத்தின் தென்மாவட்டங்கள் பலன் பெறும். முல்லை பெரியாறு உள்ளிட்ட அணைகள், குமரி மாவட்டத்தின் நீர் ஆதாரங்கள் பலன் பெறும். குமரி மாவட்டத்தில் இன்று காலை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. நாகர்கோவில், தோவாளை, அஞ்சுகிராமம், ஆரல்வாய் மொழி பகுதிகளில் சாரல் மழை பெய்தது.

தலைப்புச்செய்திகள்