Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருச்சி, கரூர் உள்பட 5 மாவட்டங்களில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு

ஜுன் 03, 2019 10:42

திருச்சி: கந்தக பூமியான திருச்சி மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கே முன்பே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் ஏரி, குளங்களில் தண்ணீர் முற்றிலும் வற்றி விட்டன. காவிரி ஆற்றிலும் தண்ணீர் வற்றி பாலைவனம் போல் காட்சியளிக்கிறது.
 
வெயிலின் தாக்கத்தால் குடிநீருக்காக அமைக்கப்பட்டுள்ள ராட்சத கிணறுகளில் இருந்து எடுக்கப்படும் நீரின் அளவும் குறைந்து விட்டது. இதனால் திருச்சி நகரில் மாநகராட்சி சார்பில் மக்களுக்கு சரியான முறையில் குடிநீர் வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

தினமும் 30 நிமிடம் கூட குழாய்களில் தண்ணீர் வருவதில்லை. சில பகுதிகளில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் வழங்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். பெண்கள் காலிக்குடங்களுடன் ஆங்காங்கே மறியலில் ஈடுபடும் சூழல் உள்ளது.

மாவட்டத்திற்குட்பட்ட துறையூர், தொட்டியம், மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி, முசிறி உள்ளிட்ட பகுதிகளில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. மணப்பாறை பகுதியில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மேட்டுப்பட்டி பகுதியில் பல நாட்களாக குடிநீர் விநியோகிக்காததால் பாதிக்கப்பட்ட அப்பகுதி பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.

இருப்பினும் குடிநீர் விநியோகிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து இன்று காலை 100-க்கும் மேற்பட்டோர் மணப்பாறை-கோவில்பட்டி சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல் குடிநீருக்காக மணப்பாறை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தினந்தோறும் மறியல் நடைபெறுவது வாடிக்கையாகிவிட்டது.

கரூர் மாவட்டத்தில் கடவூர், வெள்ளியணை, அரவக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. அரவக்குறிச்சி பகுதியில் இன்னும் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படாததால் அப்பகுதி பொதுமக்கள் முற்றிலும் நிலத்தடி நீரை மட்டுமே நம்பியுள்ளனர். கரூர் நகரில் 7 நாளுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் அவர்கள் லாரிகள் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீரை அதிக விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அப்பகுதி பொதுமக்கள் தண்ணீரை விலைக்கு வாங்கியே பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்டத்திற்குட்பட்ட எளம்பளூர், அருமடல் பகுதி வயல்களில் உள்ள கிணற்று தண்ணீர் டேங்கர் லாரிகள் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது. 4 ஆயிரம் லிட்டர் தண்ணீர் ரூ.1000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. துறைமங்கலம், பேரளி பகுதி பொதுமக்கள் குடிநீர் கேட்டு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரியலூர் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளுக்கு திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் இருந்து தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. தற்போது 2 நாளுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் பல இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் வறண்டு விட்டது. 1000 அடியில் ஆழ்குழாய் கிணறு அமைத்தும் தண்ணீர் வரவில்லை.

இதனால் அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் காலி குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்