Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழர்களை உரசிப்பார்க்காதீர்கள்: மத்திய அரசுக்கு திமுக எச்சரிக்கை

ஜுன் 03, 2019 11:55

சென்னை: நாடு முழுவதும் தற்போது காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட கல்வி கொள்கை அமலில் உள்ளது. தமிழகத்தில் இருமொழிக் கொள்கை கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நிலையில் மத்திய அரசு சார்பில் மும்மொழித்திட்டத்திற்கான புதிய கல்வி கொள்கை குறித்து ஆராய கஸ்தூரி ரங்கன் தலைமையில் குழு ஒன்றை நியமித்திருந்தது.

இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில்  சென்னையில் இன்று நடைபெற்ற திமுக செயற்குழுவில் மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

ஜவஹர்லால் நேரு, அறிஞர் அண்ணா, கருணாநிதி போன்றோர் கொண்டு வந்த இருமொழிக் கொள்கை மற்றும் மொழிவாரி மாநிலங்கள் , கூட்டாட்சி தத்துவம் ஆகியவற்றிற்கு எதிராக மத்தியில் மோடி அரசு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் புதிய கல்வி கொள்கை குறித்த ஆய்வு செய்வதற்கான குழு, இந்தியை திணிக்கும் மும்மொழித்திட்டத்தை பரிந்துரை செய்து மத்திய அரசிடம் வழங்கியது.

இதன் தொடர்ச்சியாக இந்தி கட்டாய மொழியாக்கப்படும் என்று தகவல் வெளியாகி, பல்வேறு மாநிலங்களில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து மத்திய அரசு அனைத்து மாநிலங்களுடனும் கலந்து ஆலோசித்து சுமூக தீர்வு  வழங்கப்படும் என உறுதி அளித்தது.

இது தமிழர்களை உரசிப்பார்க்கும் செயலாகும். பன்மொழி பண்பாடு இருக்கும் நாட்டில் மக்கள் கருத்துக்களை அறியாமல் மத்திய அரசு முடிவெடுக்காது என நம்புகிறோம். தமிழர்களின் உணர்வோடு விளையாட வேண்டாம் என பாஜகவை கேட்டுக் கொள்வதோடு, இரு மொழிக் கொள்கைக்கு ஆபத்து விளைவிக்கும் எந்த செயலானாலும் திமுக முன்னின்று எதிர்க்கும் என்பதையும் இக்கூட்டம் உறுதியாக தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தலைப்புச்செய்திகள்